மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் , என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்கம் பொத்துவில் தொடக்கம் பலிகண்டி வரையான போராட்டத்தின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு அவர்களால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் ஒரு வருட பூர்த்தி
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான எழுச்சி போராட்டத்தின் ஒரு வருட பூர்த்தி நேற்றாகும். ஆயுதப்போராட்டம் மௌனித்த பின்னர் தமிழர் தாயகம் எங்கும் கொந்தளித்த மாபெரும் எழுச்சிப்போராட்டமாக சமகால வரலாற்றில் இது இடம்பிடித்திருந்தது. பல்வேறு அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் தமிழினமே தன்னெழுச்சியாக பொங்கியெழுந்து தமது நியாயமான கோரிக்கைகளான மரபுவழித்தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் என்பவற்றையும் தமக்கான சர்வதேச நீதியினையும் வலியுறுத்தி நின்ற நாள். நீதிமன்ற தடை உத்தரவுகள், அச்சுறுத்தல்கள், கல்வீச்சுகள் என பல்வேறு தடைகளையும் தாண்டி, அரசியல் பாகுபாடுகளைபுறந்தள்ளி தமிழினமே ஒருமித்து எழுந்து நின்ற தருணம்.
தமிழினத்தின் சுயநிர்ணய உரிமை என்பதனையே அடிநாதமாக கொண்டு இப்போராட்டம் கட்டமைக்கப்பட்டது. இதன்வழி தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு நடத்தப்படும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் கூறுகளின் தாக்கங்களையும், முஸ்லிம்கள் மற்றும் மலையக தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளையும் உள்ளடக்கியதான பின்வரும் கோரிக்கைகளை இப்போராட்டம் வலியுறுத்தி நின்றது.
1) யுத்தம் நிறைவடைந்து கடந்த பதினொரு ஆண்டுகளில் வடக்கு-கிழக்கை இராணுவ மயமாக்கிவரும் சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களின் கலாசார, பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதுடன் வடக்கு-கிழக்கு பூர்வீக குடிகளான தமிழர்களின் இனப்பரம்பலில் மாற்றத்தை உருவாக்கி, தமிழ்த் தேசியத்தைச் சிதைவடையச் செய்து, அவர்களது இருப்பை இல்லாமல் செய்வதற்காக பல வகையிலும் கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் அடிப்படையில் தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், நிலவள திணைக்களம், பௌத்த சாசன அமைச்சு மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக பௌத்த மயமாக்கல், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை சிறிலங்கா அரசாங்கமானது முனைப்போடு நடைமுறைப்படுத்தி வருகிறது. வடக்கு-கிழக்கில் உள்ள சுமார் 200 ற்கும் மேற்பட்ட தொன்மை வாய்ந்த தமிழ் ஆலயங்களை கையகப்படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. அத்துடன் தமிழர் தாயகம் எங்கிலும் பெளத்த விகாரைகள் அமைக்கப்பட்டும், தொடர்ந்தும் அமைக்கப்படுவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. இவ்வாறான நில அபகரிப்புகளும், பெளத்த சிங்கள மயமாக்கல்களும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
2) தமிழர் தாயகம் எங்கும் நிலைகொண்டிருக்கும் சிங்கள இராணுவம் உடனடியாக அகற்றப்படுவதுடன், இயல்பு நிலை ஏற்படுத்தப்படவேண்டும். சிவில் நிர்வாகங்களில் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுத்தல் உடனடியாக நிறுத்தப்படுவதுடன் தற்போது நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்.
3) மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீதும், அதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வரும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதுடன் அவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இது அவர்களின் பேச்சுரிமை, நடமாடும் சுதந்திரம் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும். அத்துடன் தமிழர் தரப்பில் உருவாகும் விடுதலைக்கான தன்னெழுச்சியான அரசியல் வெளியினை ஒடுக்குவதில் சிங்கள பெளத்த பேரினவாத அரசு குறியாகவே உள்ளது. இவ்வாறான அடக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
4) தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தும், பூர்வீக வாழ்விடங்களை அபகரித்து சிங்களக் குடியேற்றங்களைத் தொடர்ந்து மேற்கொண்டும் வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் உள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரைக் காணிகளை அபகரித்து சிங்களக் குடியேற்றம் ஒன்றை உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மட்டக்களப்பில் உள்ள தமிழ்ப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்குடன் பால் தரும் பசுக்களை திட்டமிட்ட வகையில் படுகொலை செய்யும் நடவடிக்கைகளும் நடந்தேறி வருகின்றன. இதன் ஒரு கட்டமாக தமிழ்ப் பூர்வீக நிலங்களில் வனங்கள் அழிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான தமிழரின் வாழ்வாதாரங்களை அழிக்கும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
5) தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட காணிகள் உடனடியாக மீளக் கையளிக்கப்பட வேண்டும்.
6) தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையைத் தொடர்ச்சியாக மறுதலித்து வரும் இந்த சிங்கள பெளத்த அரசானது, தமிழர்களின் நினைவுத்தூபிகள், அடையாளங்களை அழிப்பதில் முனைப்பாகச் செயல்படுகின்றது. இந்நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
7) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்கள் பலரையும் கைது செய்து பல வருடங்களாகத் தடுத்து வைத்துள்ளனர். இஸ்லாமியச் சகோதரர்களையும் இதே பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைப் பயன்படுத்தி தற்போது தடுத்து வைக்கத் தொடங்கியுள்ளனர். பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுவதுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் யுத்த மற்றும் அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும்.
8) பல வருடங்களாகத் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும்.
9) இஸ்லாமிய மக்களின் மத ரீதியான பாரம்பரிய சமய சடங்கான ஜனாசாக்களைப் புதைக்கும் செயற்பாடுகளை இல்லாமல் செய்து ஜனாசாக்களை இச்சிங்கள பெளத்த பேரினவாத அரசு எரியூட்டி வருகின்றது. இதற்கு எதிராகப் போராடும் முஸ்லீம் சமூகத்தையும் அடக்கி ஆள முனைகின்றனர். இந்நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட்டு இஸ்லாமிய மக்களின் அடிப்படை மத உரிமை மதிக்கப்பட வேண்டும்.
10) அத்துடன் மலையக தமிழ் மக்கள் தங்களது நாளாந்த வாழ்வாதாரத்திற்காக 1000 ரூபாய் சம்பள உயர்வு கேட்டுப் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படுவதுடன் அவர்கள் எதிர் நோக்கும் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட வேண்டும்.