அத்தியாவசியமற்ற அதிக மின்சாரத்தை செலவிடும் உபகரணங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த தவிறினால் அடுத்துவரும் மூன்று மாத காலத்திற்கு மின் துண்டிப்பை ஏற்படுத்த வேண்டிவரும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுத் தலைவர் ஜனக்க ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இலங்கை மின்சார சபையானது எதிர்வரும் மூன்று மாத காலத்திற்கும் மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி கேட்டுள்ளது. இதனால், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த தவறும் பட்சத்தில் மின் விநியோகத்தை தடை செய்வதற்கான அவசியம் ஏற்படும்.
தற்போது உள்ள நிலையில், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் மின்சாரத் தேவை அதிகமாக காணப்படுகிறது. இந்த காலப்பகுதியில் மின்சார பாவனையாளர்கள் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்திக்கொள்வது சிறந்தது.
குறிப்பாக குளிர்சாதனப் பெட்டி (ப்ரிட்ஜ்), சலவை இயந்திரம் (வொஷிங் மெஷின்), குளிரூட்டி (ஏ.சி.), மின் அழுத்தி (அயன் பொக்ஸ்) உள்ளிட்ட அதிக மின்சாரம் செலவாகும் மின் இயந்திரங்களின் பாவனையை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், தேவைக்கு அதிகமாக மின் விளக்குகளை பயன்படுத்த வேண்டாம்.
இவ்வாறு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தாவிட்டால் எதிர்வரும் மூன்று மாத காலத்திற்கு மின் துண்டிப்பை ஏற்படுத்த வேண்டி வரும் என்றார்.