
மலையக மக்களின் அபிலாசைகளுக்கு குரல் கொடுக்க வேண்ம் என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் நடாத்திய ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறுதெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது.
நுவரேலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு தொடர்பாக அரசின் வர்த்தமானிப் பிரகடனம் நிறைவேற்றப்படாததை எதிர்த்து மலையக அரசியல் அரங்கம் கையெழுத்துப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. அப் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதற்கும் எம்மாலான கையெழுத்துக்களை சேகரித்து வழங்குவதற்கும் சமூக விஞ்ஞான ஆய்வுமையம் தீர்மானித்துள்ளது.
நுவரேலியா மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகங்களை உருவாக்குவது தொடர்பான தீர்மானம் 2016ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 2018ம் ஆண்டு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டது. 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் திகதி அரச வர்த்தமானியில் (வர்த்தமானி இலக்கம் 2147/28) விசேட வர்த்தமானி பிரகடனமாக வெளிடப்பட்டது. இப் பிரகடனம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாறாக இரண்டு உப பிரதேச செயலகங்கள் மட்டும் உருவாக்கப்பட்டன.
அதேவேளை குறிப்பிட்ட வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது போல காலி மாவட்டத்தில் பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு காலி மாவட்டத்திற்கு ஒரு நீதியும் நுவரேலியா மாவட்டத்திற்கு இன்னோர் நீதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனையே மனோ கணேசன் காலிக்கு வெள்ளி நுவரெலியாவிற்கு தகரம் என விமர்சனம் செய்துள்ளார். அரசின் இந்தப் பாராபட்சமான நடவடிக்கையை சமூக விஞ்ஞான ஆய்வு மையம் வன்மையாக கண்டிக்கின்றது.
வடக்கு-கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டு செயற்படும் சமூக விஞ்ஞான ஆய்வுமையம் நான்கு காரணங்களுக்காக இப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவது எனத் தீர்மானித்துள்ளது.
முதலாவது ஒடுக்கப்படும் சமூகம் எங்கிருந்தாலும் அதற்கு குரல் கொடுக்க வேண்டியது ஜனநாயக உரிமைகளுக்காக போராடும் அமைப்புக்களது கடமையாகும். மலையக மக்கள் தற்போதும் பெரும் தோட்ட சட்டத்திற்குள் கட்டமைக்கப்பட்டுள்ள அடிமைப் பொறிமுறைக்குள் உட்பட்டுள்ளனர். .இன்னமும் சிறீலங்கா அரசின் நிர்வாக முறைமைக்குள் அவர்கள் உள்வாங்கப்படவில்லை. மலையக மக்களின் அரசியல் இருப்பு பலப்பட்டுவிடும் என்பதற்காக பெரும்தேசியவாத சக்திகள் இலாவகமாக இதனை தவிர்க்கின்றனா; இதற்கு எதிராக குரல் கொடுப்பது ஜனநாயக சக்திகளின் தவிர்க்க முடியாத கடமையாகும்.
இரண்டாவது பெரும் தேசியவாதஅரசாங்கத்தின் இனவாத முகத்தை அம்பலப்படுத்துவதாகும். பெரும்தேசியவாத அரசாங்கம் வடக்கு-கிழக்கு மக்களுக்கு காடடிய இனவாத முகத்தை தற்போது மலையக மக்களுக்கும் காட்டத் தொடங்கியுள்ளது. ஒரே வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட காலி மாவட்டத்திற்கு ஒரு நீதியும் நுவரெலியா மாவட்டத்திற்கு இன்னோர் நீதியும் வழங்கப்படுவது இனவாத செயற்பாடேயெழிய வேறொன்றுமல்ல.
மூன்றாவது மலையக மக்கள் வடக்கு-கிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்தவரை மிகப்பெரும் சேமிப்புச் சக்திகளாவர். அதேவேளை மலையக மக்களுக்கும் வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள் சிறந்த சேமிப்புச் சக்திகளாவர். அரசியல் அடையாளங்களிலும் அரசியல் தீர்விலும் வேறுபட்ட பண்புகளைக் கொண்டிருக்கின்றபோதும். இரண்டு தேசிய இனங்களும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருப்பது இலங்கைத் தீவின் புவிசார் அரசியல் நிர்ப்பந்தமும், சமூக நிர்ப்பந்தமும் ஆகும்.
நான்காவது தமிழ் அரசியல் வரலாற்றில் இதுவரை கால மரபுத் தொடர்ச்சியை பின்பற்றுவதாகும். இதுவரை காலமும் மலையக மக்களுக்காக குரல் கொடுக்க வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள் பின்நின்றதில்லை. அதேபோல வடக்கு-கிழக்கு மக்களுக்காக குரல் கொடுக்க மலையக மக்கள் பின்நின்றதில்லை.
தந்தை செல்வா மலையக மக்களின் பிரஜாவுரிமையும் , வாக்குரிமையும் பறிக்கப்பட்டதைக் கண்டித்தே அகில இலங்கை தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார். அதன் முதலாவது அங்குராப்பணக் கூட்டத்திலேயே மலையக மக்களின் போராட்டங்களுக்கு பக்கபலமாக நிற்பது எமது கடமை எனக் கூறினார். 1960ம் ஆண்டு அரசாங்கத்திடம் சமர்ப்பித்த நான்கு அம்சக் கோரிக்கையிலும் நான்காவது கோரிக்கையாக மலைய மக்களின் கோரிக்கையையும் முன்வைத்தார். தமிழரசுக் கட்சியின் மாநாடுகளில் மலையக மக்களின் அபிலாசைகளுக்கும் முன்னுரிமைகள் வழங்கப்பட்டன.
1985ம் ஆண்டு திம்பு மாநாட்டில் முன்வைக்கப்பட்ட திம்புப் பிரகடனத்திலும் நான்காவது கோரிக்கையாக மலையக மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை முன்வைக்கப்பட்டது. அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் அனுப்பிய கடிதத்திலும் மலையக மக்களின் அபிலாசைகள் சேர்கப்பட்டுள்ளன.
இதேபோல மலையக மக்களும் வடக்கு-கிழக்கு மக்களின் போராட்டங்களுக்கு குரல் கொடுக்கத் தவறவில்லை. தொண்டமான் காலத்திலிருந்து அந்த மரபு பின்பற்றப்பட்டது. தொண்டமான் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை சுபாஸ் சந்திரபோஸின் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தோடு ஒப்பிட்டுப் பேசினாh.; முழுமையான ஆதரவினை வழங்கினார். சந்திரசேகரன் தனது இயலளவுக்கு மேலாக ஒத்துழைப்பு வழங்கியதால் சிறைவாசம் அனுபவித்தார். வடக்கு-கிழக்கில் வாழ்ந்த ஆயிரக் கணக்கான மலையக வம்சாவழியினர் போராளிகளாகி உயிர் துறந்துள்ளனர்.
இந்த வரலாற்று மரபுத் தொடர்ச்சியைப் பேணுவதும் பாதுகாப்பதும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வரலாற்றுக் கடமையாகும். இக் கடமையின் படி மலையக மக்களின் விவகாரங்களை உலகளாவிய வகையில் கொண்டுசெல்வதற்கு தயாராக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் உள்ளனர்.
மலையக மக்களின் இந்தக் கையெழுத்துப் போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு தாயக மக்களையும், புலம்பெயர் மக்களையும் தயவாக கேட்டுக்கொள்கின்றோம்.
சி.ஜோதிலிங்கம்
இணைப்பாளர்
சமூக விஞ்ஞான ஆய்வுமையம்