தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து நடாத்தவுள்ள மக்கள் கருத்தரங்கு நாளைய தினம், யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,
தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசியக் கட்சி ஆகியன இந்த மக்கள் கருத்தரங்கு நிகழ்ச்சியை ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில், காலை 9.30 மணியளவில்
ஈழத் தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும் எனும் தொனிப்பொருளை
மையப்பொருளாக வைத்து இந்த மக்கள் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மக்கள் கருத்தரங்கு நிகழ்ச்சியில், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் ‘ஈழத்தமிழர் தீர்வில் நாடாளுமன்றத்தின் வகிபங்கு’ எனும் தலைப்பில் உரையாற்றுவார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா ‘சமஸ்டித் தீர்வு’ செல்வா முதல் இன்றுவரை முயற்சிகளும் முட்டுக்கட்டைகளும்’ எனும் தலைப்பில் உரையாற்றவுள்ளார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ‘ ஈழத்தமிழர் தீர்வு நோக்கிய செயற்பாடுகளும் உறுதியான ஐக்கியத்தின் முக்கியத்துவமும்’ எனும் தலைப்பில் உரையாற்றவுள்ளார்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ‘நல்லாட்சி அரசின் தீர்வு நோக்கிய செயற்பாடுகளும் சமகாலத்தில் வடக்கு,கிழக்கில் அரசின் முரண்பாடான செயல்திட்டங்களும்’ எனும் தலைப்பில் உரைநிகழ்த்துவார்.
தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா ’13க்கு அப்பாலான Nபுச்சுவார்த்தைகள் பிரேமதாச தொடக்கம் மகிந்த வரை ஒரு பகுப்பாய்வு’ எனும் தொனிப்பொருளில் உரையாற்றுவார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரச அறிவியல்துறை தலைவர் கலாநிதி கே.ரி.கணேசலிங்கம் ‘ஈழத் தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும் இலங்கையில் இந்திய பாதுகாப்பு நலன்களும் ஓர் அரசியல் பொருளாதாரப் பார்வை’ என்ற தலைப்பில் உரைநிகழ்த்துவார்.
அரசியல் ஆய்வாளரும், மூலோபாய கற்கைகளுக்கான திருகோணமலை நிலையத்தின் பணிப்பாளருமான அ.யதீந்திரா ‘சர்வதேச அழுத்தங்களும் சமஸ்டித் தீர்வை அடைவதில் முன்னால் இருக்கும் சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்பில் உரைநிகழ்த்துவார்.
அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் ‘ஈழத் தமிழர் அரசியல் தீர்வில் இந்தியாவின் பிராந்திய சர்வதேச முக்கியத்துவம்’ என்ற தலைப்பிலும்
நாளைய தினம் உரையாற்றவுள்ளார்.