வரலாற்று சிறப்புமிக்க வடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வார் வருடாந்த உற்சவத்தின், சமுத்திர தீர்த்தோற்சவம் நேற்றைய தினம் பிற்பகல் நான்கு முப்பது மணியளவில் கற்கோவளம் இந்து சமுத்திரத்தில் இடம்பெற்றது.
முன்னதாக வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள், வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று, பின்னர் ஆஞ்சநேயர் பாதுகாப்புடன் முன்வர விநாயக பெருமான் அணிவகுக்க வல்லிபுரத்து சக்கர ஆழ்வார் சமுத்திரம் நோக்கி பல ஆயிரம் பக்தர்கள் படை சூழ கற்கோவளம் சமுத்திரத்தில் தீர்த்தமாடினார். இவ்வேளையில் வானில் கருடன் வட்டமிட அடியவர்கள் ஆச்சரியத்துடன் கண்டுகளித்ததை அவதானிக்க முடிந்ததுடன் இம்முறையும் வல்லிபுர ஆழ்வார் தீர்த்தோற்சவத்தில் நாட்டின் பல இடகக்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான அடியார்கள் இம்முறையும் கலந்து கொண்டதை அவதானிக்க முடிந்தது.
கடந்த வருடம் புரட்டாதி மாதத்தில் இடம்பெற வேண்டிய குறித்த திருவிழாவானது கொரோணா நோய்த்தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டு இவ்வருடம் மாசி மகம் அன்று கொடியேற்றம் இடம்பெற்று நேற்று முன் தினம் தேர் உற்சவம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்றைய நாள் சமுத்திர தீத்திக் உற்சவம் இடம்பெற்றது.
இதேவேளை சுகாதார நடைமுறைகளை பேணி இடம் பெற்ற வல்லிபுர ஆழ்வாரின் சமுத்திர தீர்த்தம் உற்சவத்தில் யாழ் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டமை இங்கு சிறப்பம்சமாகும். இதற்கு பருத்தித்துறை போலீஸ் பொறுப்பதிகாரி தலமையில் போலீசார், சிறப்பு அதிரடி படையினர், இராணுவம், பாதுகாப்பு வழங்கியிருந்ததுடன் அடிப்படை சுகாதார வசதிகளை பருத்தித்துறை பிரதேச சபை மேற்கொண்டிருந்த இருந்தமை குறிப்பிட தக்கது.