போர்த்துக்கல்லில் உள்ள அசோர்ஸ் தீவுகள் அருகே அட்லாண்டிக் பெருங்கடலில் வோல்க்ஸ்வேகன் குழுமத்தின் ஆயிரக்கணக்கான சொகுசு கார்களை ஏற்றி சென்று கொண்டிருந்த பனாமா நாட்டை சேர்ந்த ஃபெலிசிட்டி ஏஸ் என்ற சரக்குக்கப்பல் தீப்பிடித்து எரிந்து வந்த நிலையில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டிருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலில் லம்போர்கினி, போர்ஷ், ஓளடி உள்பட சுமார் 3965 சொகுசு கார்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
அவற்றை வெளிநாடுகளுக்கு இறக்குமதி செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாகவும், 100இற்கும் மேற்பட்ட கார்கள் டெக்சாஸில் உள்ள துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
தீ விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போர்த்துக்கீசிய கடற்படை மற்றும் விமானப்படையினர் விரைந்து சென்று கப்பலில் இருந்த 22 பணியாளர்களை பத்திரமாக மீட்டு ஹோட்டலில் தங்கவைத்தனர்.
இதனையடுத்து தீயை அணிக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் தீ முழுமையாக அணைக்கப்பட்டு சேதம் அடைந்த சொகுசுக்கார்களை எண்ணும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், தீவிபத்துக்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அந்நாட்டு கடற்படை தகவல் தெரிவித்துள்ளது