வட்டுக்கோட்டையில் உதவி செய்வது போல நடித்து வயோதிப பெண்ணிடம் சங்கிலி திருடிய பெண் கைது!

உதவி செய்வது போன்று பாசாங்கு செய்து வயோதிப பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை அபகரித்து சென்ற இளம் பெண்ணொருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அராலி வைத்திய சாலைக்கு சிகிச்சைக்கு சென்று , வீடு திரும்புவதற்காக பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த வயோதிப பெண்ணிடம் , மோட்டார் சைக்கிளில் வந்த இளம் பெண்ணொருவர் , பேருந்து வர நேரமாகும். நான் இந்த வீதி ஊடாகவே செல்கிறேன். நான் மோட்டார் சைக்கிளில் இறக்கி விடுகிறேன் என கூறி வயோதிப பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றுள்ளார்.

செல்லும் வழியில், இந்த வீதியில் திருடர்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது. நீங்கள் கழுத்தில் சங்கிலி அணிந்திருந்தால் அறுத்து சென்று விடுவார்கள். அதனால் அதனை கழட்டி கைப்பைக்குள் வையுங்கள் என அறிவுரை கூறியுள்ளார்.

அதனை நம்பி வயோதிப பெண்ணும் தனது சங்கிலியை கழட்டி கைப்பைக்குள் வைத்து , அதனை கையில் வைத்திருந்த போது , கையில் வைத்திருந்தால் கைப்பையை பறித்து சென்று விடுவார்கள் என கூறி கைப்பையை தனது மோட்டார் சைக்கிளினுள் வையுங்கள் என  கூறியுள்ளார்.

மோட்டார் சைக்கிள் இருக்கைக்கு கீழ் கைப்பை இருக்கட்டும் , இறங்கும் போது தருகிறேன் என கூறி அதனுள் வைத்து விட்டு வயோதிப பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

வீதியில் ஆள்நடமாட்டம் அற்ற நேரம் , தனது மோட்டார் சைக்கிளை நிறுத்து விட்டு , மோட்டார் சைக்கிள் திடீரென பழுது வந்து நின்று விட்டது. நீங்கள் இறங்குங்கள் பார்ப்போம் என கூறி , வயோதிப பெண் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கியவுடன் , அப்பெண் தனது மோட்டார் சைக்கிளை இயக்கி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

சங்கிலியையும் , கைப்பையையும் இழந்த வயோதிப பெண் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். முறைப்பாட்டின் போது, தன்னை ஏமாற்றிய இளம் பெண்ணின் அங்க அடையாளங்களையும் , மோட்டார் சைக்கிள் இலக்கத்தையும் குறிப்பிட்டதின் அடிப்படையில் , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இளம் பெண்ணை கைது செய்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews