பிரிட்டன் விமானங்கள் ரஷ்ய விமான நிலையங்கள், வான்வெளிப் பகுதியில் பறக்க ரஷ்யா தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் உடன் ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைன் படைகள் திணறி வருகின்றன. பல நாடுகளிடம் ஆதரவு கரம் நீட்டிய உக்ரைன், தங்கள் நாட்டுடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்த்து போரிட யாருமில்லை, தனித்து விடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் கவலை தெரிவித்துள்ளார். இருந்தும் பல நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா போரை நிறுத்த வலியுறுத்தின. உக்ரைனுக்கு எதிரான நடவடிக்கையில் ரஷ்யா மீது அமெரிக்க, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக, ரஷ்யா மீது பிரிட்டனும் பொருளாதாரத் தடை விதித்தது. அதுமட்டுமல்லாமல், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் நாட்டினரை அடிபணியச் செய்ய நினைக்கும் ஒரு சர்வாதிகாரி’ என்றும் குறிப்பிட்டார். இதனால் கோபமடைந்த ரஷ்யா, தங்கள் நாட்டின் விமான நிலையங்களிலும், வான்வெளிப் பகுதியிலும் பிரிட்டன் விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.