யாழ்ப்பாணத்தில் இரு வேறு உலக சாதனைக்கான போட்டி நிகழ்வுகள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை உரும்பிராய் இந்துக் கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றுள்ளது.
சிலம்பு சுற்றுதலில் உலக சாதனை நிலைநாட்டுவதற்கான தெரிவு போட்டி மற்றும் தனிநபர் புஸ்யப் போன்ற போட்டிகள் இடம்பெற்றுள்ளன.
தமிழர்களின் புராதன கலைகளில் ஒன்றான சிலம்பு சுற்றுதலில் கின்னஸ் சாதனை நிலைநாட்டும் முகமாக முதற்கட்டமாக உலக சாதனையை நிலைநாட்டும் தெரிவுப் போட்டி 8 நாடுகளை உள்ளடக்கி ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த போட்டியின் விதிமுறையாக மூன்று மணித்தியாலங்கள் இடைவிடாது சிலம்பு சுற்றுவதோடு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஒவ்வொரு மணித்தியாலமும் ஒவ்வொரு படிமுறைகளில் சிலம்பு சுற்றுதல் இடம் பெற்றது.
இலங்கையில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 14 போட்டியாளர்கள் பங்குபற்றினார்கள்.
தனிநபர் புஸ்யப் போட்டிக்காக இரண்டு மாணவர்கள் பங்குபற்றிய நிலையில் வவுனியாவைச் சேர்ந்த 8 வயது மாணவன் 4 நிமிடம் 30 வினாடிகளில் 390 புஸ்யப்புக்களை நிகழ்த்திக் காட்டினார். குறித்த போட்டி நிகழ்வுகள் யாவும் மெய்நிகர் வழியின் ஊடாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.