உக்ரைனுக்கு எதிரான “ரத்தக்களறியை” உடனே நிறுத்த வேண்டும் எனவும், அங்கிருந்து தங்கள் படைகளை திரும்பப் பெற வேண்டும் எனவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அமெரிக்க வெளியுறவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
நேற்றையதினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,
படையெடுப்பு குறித்த தகவல்களை சுயாதீன ஊடகங்கள் ஒளிபரப்பும் திறனை தடுப்பதன் மூலம், “ஊடக சுதந்திரம் மற்றும் உண்மையின் மீது முழு தாக்குதலை” ரஷ்யா தொடங்கியிருப்பதாக, அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
மில்லியன் கணக்கான ரஷ்யர்கள் சுதந்திரமான தகவல்களை அணுகவும், உலகம் முழுவதும் ஒருவருக்கொருவரை இணைக்கவும் உதவும் டுவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில் ரஷ்யாவின் “அழுத்தத்தை” அமெரிக்கா சுட்டிக்காட்டியது.
முக்கியமான உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யத் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உக்ரைனிலிருந்து வெளியேறி, அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்று ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.