ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் ஜி.எல்.பீரிஸ் ஆற்றியிருந்த உரையில் அரசின் இறுதி யுத்தக்குற்றங்களை மூடி மறைக்கக் கூடிய வகையில், அதாவது யுத்தத்தில் ஏற்பட்ட வெறுப்புக்களை மீட்கக்கூடாது எனவும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாகச் சாட்சியங்களைத் திரட்டுதல் தவிர்க்கப்படவேண்டும் எனவும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இதுவரை இறுதி யுத்தத்தில் யுத்தக்குற்றங்கள் இடம்பெறவில்லை என்றும் மக்களை மீட்கும் மனிதாபிமான யுத்தம் இடம்பெற்றதாகவே அரசு கூறி வந்தது. அப்படி யுத்தக்குற்றங்கள் இல்லை என்றால் ஆட்சியாளர்கள் அச்சப்படத் தேவையில்லை. அத்துடன் மனித உரிமைப் பேரவை சாட்சியங்களைத் தேடினாலும் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை.
சாட்சியங்களாகப் படையினரின் அறப்பணிகள் மாத்திரமே வெளிவரும். வெறுப்புக்களும் ஏற்பட வாய்ப்பு இல்லை. உண்மையில் யுத்தக் குற்றங்கள் ஏற்பட்டிருந்தால் தான் தமிழ் மக்களுக்கு வெறுப்புகள் ஏற்படும். சாட்சியங்கள் மூலமாக அரசுக்குப் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளன.
இதில் இருக்கின்ற உண்மை என்னவென்றால் யுத்தத்தில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கான சாட்சியங்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருக்கின்றன. அவை திரட்டப்படும் போது பல உண்மைகள் வெளிவரும்.
இதனால் அவை சர்வதேச ரீதியாக உறுதி செய்யப்பட்டு விடும். உள்நாட்டுப் பொறிமுறை இல்லாமல் போனதற்கான உண்மைகள் காரணங்கள் உணரப்பட்டு விடும் என்பதே வெளியுறவு அமைச்சர் பீரிசின் அச்சமாக உள்ளது.
கொலைகள், பலாத்காரங்கள் சித்திரவதைகள் எல்லாம் வெளியாகி விடும் என்று ஆட்சியாளர்கள் அஞ்சுகின்றார்கள், கடத்தப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கக் கூடாது, இனவாத ரீதியில் கெளரவமானவர்கள் எனக் கொள்ளப்படும் குற்றவாளிகள் தண்டிக்கப்படக்கூடாது, குற்றங்களுக்குக் காரணமாக இருந்து கட்டளை இட்ட ஜாம்பவான்கள் யாரென அறியப்படக்கூடாது என்பதிலும் ஆட்சியாளர் கவனமாக உள்ளார்கள்.
இறுதி யுத்தத்தில் தமிழர்களே பெருந்தொகையில் உயிர்களை இழந்துள்ளார்கள் என்பதால் சிங்கள ஆட்சியாளர்கள் அதனை சர்வசாதாரணமாக நினைக்கக் கூடாது. அவர்களும் இந்நாட்டுப் பிரசைகள் என்பதை இனவாத மூளையர்கள் மறக்கக்கூடாது. இழப்புகளுக்கு நீதியும் இல்லை, இனப்பிரச்சினைக்குத் தீர்வும் இல்லை. சமத்துவ உரிமையும் இல்லை.
அப்படியென்றால் தமிழர்களை ஆள்வதற்கான தகுதியை ஆட்சியாளர்கள் இழந்துள்ளார்கள். எனவே தமிழர்கள் தம்மைத்தாமே ஆள்வதற்கான சுயநிர்ணய உரிமையினைக் கோருவதிலோ சமஷ்டியாட்சியினைக் கோருவதிலோ எந்தத் தப்பும் கிடையாது.
1948இல் இருந்து இன்றுவரை தமிழர்களின் பட்டறிவுத்தேறல் இதுவேயாகும். இதனைச் சர்வதேச சமூகம் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்