யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்வி, மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள புலோலி மேற்கு பூவற்கரை கலைமகள் முன்பள்ளிக்கு சுவிட்சர்லாந்தில் வதியும் திரு அன்ரூ சார்பாக ரூபா 40000/- பெறுமதியான கற்றல், விளையாட்டு மற்றும் பாடசாலை உபகரணங்கள், சீருடை, சத்துமா ஆகியன நேற்று 04.03.2022 வெள்ளிக்கிழமை லைப் பவுண்டேஷன் செயல்பாட்டாளரும் சுயாதின ஊடகவியலாளருமான ரா. பானுசனால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பருத்தித்துறை முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் கே.சத்தியசீலன் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத கலைமகள் முன்பள்ளிக்கு இந்த உதவி மிகுந்த பயனளிக்கும் எனவும், தொடர்ந்தும் இவ்வாறான முன்பள்ளிகளை இனங்கண்டு உதவுமாறும் கேட்டுக் கொண்டார்.
அவரைத் தொடர்ந்து உரையாற்றிய லைப் பவுண்டேஷன் செயல்பாட்டாளரும் சுயாதின ஊடகவியலாளருமான ரா. பானுசன், அதி முக்கியத்துவம் வாய்ந்த முன்பள்ளி பருவம் மாணவர்களின் உடல், உள விருத்திக்கு அவசியமானது. அவர்களே இந்நிகழ்வின் கதாநாயகர்கள். அவர்களின் விழுமியம் சார்ந்த வாழ்க்கை முறை இப்போதிருந்தே கட்டமைக்கப்பட வேண்டும். அதற்கு தம் நிறுவனம் தொடர்ந்து துணைநிற்கும் எனக் கூறினார்.
நிகழ்வில் பூவற்கரை சனசமூக நிலைய தலைவர் செ.கிருஷ்ணராஜ், கலைமகள் முன்பள்ளி முகாமைத்துவ குழுத் தலைவர் பா.சுஜந்தன், கிராம சக்தி தவிசாளர் ஜோ.சசிதரன், முன்பள்ளி ஆசிரியர் சுசிகலா, முன்பள்ளி மாணாக்கர்களின் பெற்றோர் மற்றும் மாணாக்கர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.