‘எதிர்காலத்தின் நிலையான இருப்புக்காக இன்றைய பால் நிலை சமத்துவத்தின் பாராட்சத்தை தகத்தெறி பெண் சமத்துவத்தை மதித்திடு’ எனும் தொனிப்பொருளாக ஐக்கிய நாடுகள் சபையினால் இவ்வாண்டு வெளியிடப்பட்டுள்ள தொனிப்பொருளில் கீழ் இலங்கை பெண்கள் மற்றும் மகளிர் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ‘நாடும் தேசமும் உலகும் அவளே’ எனும் கருப்பொருளுக்கு அமைவாக இவ்வாண்டு மகளிர் தின நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதி இரண்டு நாட்கள் மகளிர் தின சிறப்பு நிகழ்வுகள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான மயூரி ஜனன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள பெண்கள் அமைப்புக்களை ஒன்றிணைத்து பெண்களின் வலிமையை மேன்மை படுத்தும் வகையில் எல்லே மற்றும் கயிருத்தல் போட்டிகள் , வீதி நாடகம் , அதனுடன் இணைந்ததாக பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனையும் கண்காட்சியும் நடைபெற்றது
இதன் முதல் நாள் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் , பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் என் .மயூரன் , மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரன் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டு இரண்டு நாள் மகளிர் தின நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர்
இதன் இரண்டாம் நாள் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி சிறிகாந்த் , உதவி மாவட்ட செயலாளர் ஏ .நவேஸ்வரன் , பிரதேச செயலாளர் வி .வாசுதேவன் , பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்
ஜி .சுகுனான் , மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரன் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் அதிதிகளாக கலந்துகொண்டு இரண்டு நாள் நடைபெற்ற எல்லே மற்றும் கயிருத்தல் போட்டிகளில் வெற்றிபெற்ற பெண்களை அமைப்பினருக்கு வெற்றிக்கிண்ணங்களும் ,சான்றிதழ்களும் , பணப்பரிசில்களும் வழங்கி வைத்தனர்.
முதல் நாள் நிகழ்வில் மகளிர் தினத்தினை முன்னிட்டு அருவி பெண்கள் வலயமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான மயூரி ஜனன் மற்றும் பிரதேச மட்ட பெண்கள் அமைப்புக்களின் அங்கத்தவர்கள் இணைந்து மாவட்ட பெண்களின் உரிமைக்கான மகளிர் தின மகஜர் ஒன்றினையும் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்