பெண்களாகிய நாம் யுத்தம் முடிவடைந்து13 வருடங்களாக தொடர்ச்சியாக போராடி கொண்டிருக்கின்றோம். இந்த தொடர் போராட்டத்தில் கூட எமக்கான நீதி கிடைக்கவில்லை என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் சிவானந்தம் ஜெனிற்றா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில்நேற்று (08) சர்வதேச மகளீர் தினம் எமக்கு கறுப்பு தினமே என பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச மகளீர் தினம் என பிரகடனப்படுத்திய போதும் நாம் கறுப்பு தினமாக தான் இன்று பார்க்கின்றோம். ஏனெனில் எமது உறவுகளை தொலைத்து 13 வருடங்களை கடந்தும் எமது உறவுகளுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை. இதனால் பெண்கள் இன்று வீதியோரத்தில் நின்று போராடி கொண்டிருக்கின்றார்கள் என்றால் எமக்கான சுதந்திரம் எங்கே வழங்கப்பட்டிருக்கின்றது.
நாம் எப்படி சுகந்திரமாக இருக்கின்றோம் என சாெல்ல முடியும். எனவே சர்வதேச மகளீர் தினம் என்பது எமக்கு இன்று மிக துக்கமான தினமாகவே இருக்கின்றது.
எனவே இந்த சர்வதேசமானது மகளீர்கள் எவ்வளவு அடிமை விலங்குகளாக பூட்டப்பட்டுள்ளார்கள், அத்துடன் சிங்களவர்கள் பெண்களை எப்படி சித்திரவதை செய்து கொண்டிருக்கின்றார்கள்.? இறுதி யுத்த நேரம் எவ்வளவு பெண்களை கேவலப்படுத்தி, அவர்களின் உறுப்புக்களை சிதைத்து, துன்புறுத்தி இறக்க வைத்திருக்கின்றார்கள் என்பதை சர்வதேசம் கண்கூடாக பார்த்து கொண்டிருந்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
எத்தனையோ பெண்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டிருக்கின்றார்கள் அவர்கள் எங்கே? ஒரு பெண்ணைக்கூட அவர்கள் விடுதலை செய்யவில்லை. அந்த பெண்களை எவ்வளவு சித்திரவதை செய்திருப்பார்கள், அனைவிட இன்று எத்தனை சித்திரவதை கூடங்களில் பெண்கள் வாடிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கான விடுதலை இன்றுவரை கிடைக்கவில்லை. யுத்தம் முடிவடைந்து பெண்களாகிய நாம் 13 வருடங்களாக தொடர்ச்சியாக போராடி கொண்டிருக்கின்றோம்.
இந்த தொடர் போராட்டத்தில் கூட எமக்கான நீதி கிடைக்கவில்லை. எனவே சர்வதேசம் 49 வது கூட்ட தொடரிலாவது எமது பெண்களையும் உறவுகளையும் இந்த அரசு எவ்வளவு துன்புறுத்தியிருக்கின்றார்கள் என்பதை உணர்ந்து இந்த அரசினை சர்வதே குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி எமக்கான நீதியை பெற்று தர ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என மேலும் தெரிவித்துள்ளார்.