பெண் தலைமைத்துவ குடும்பமொன்றின் வளர்ப்பு கோழிகள் 15 களவு போயிருந்த நிலையில் கமக்கார அமைப்பின் பொருளாளர் வீட்டிலிருந்து 2 கோழிகள் மீட்பு…!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்துபுரம் கிராமத்தில் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பமொன்றின் வளர்ப்பு  கோழிகள் 15 களவு போயிருந்த நிலையில் கமக்கார அமைப்பின் பொருளாளர் வீட்டிலிருந்து 2 கோழிகள் மீட்கப்பட்ட சம்பவம்  பதிவாகியுள்ளது.

கடந்த சில தினங்களிற்கு முன்னர் குறித்த குடும்பத்தின் வீட்டு வளர்ப்பு கோழிகளில் 15 கோழிகள் திருடப்பட்டிருந்தது.
தொடர்ந்து குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் அவதானித்து வந்த குடும்பத்தினரின் நிலை அறிந்து கிராமத்தவர்களால் கோழி பாதுகாக்கப்பட்டு வரும் வீடு தொடர்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்துபுரம் கமக்கார அமைப்பின் பொருளாளர் வீட்டில் கோழி இருப்பதை அவதானித்த குறித்த குடும்பத்தினர் சென்று தமது கோழியை அடையாளம் கண்டு இரண்டு கோழிகளை மீட்டுள்ளனர். 
குறித்த கோழி இரண்டுடனும் சென்று இந்துபுரம் பொலிஸ் காவலரணில் முறைப்பாடு செய்ததுடன், பொலிசார் சம்பவ இடத்தில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 
இவ்விடயம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு களவாடப்பட்ட எஞ்சிய கோழிகளை மீட்டுத்தர வேண்டும் எனவும், குற்றவாளியை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
74 வயதான குறித்த தாயார் கோழி வளர்ப்பில் தமது குடும்ப வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருகின்றார். இந்த நிலையில் குறித்த தாயாரின் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டிய முக்கியம் வாய்ந்த கமக்கார அமைப்பின் பொருளாளரின் செயற்பாடு தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin