திறைசேரியில் தற்போது 400 மில்லியன் டொலர்கள் கூட இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். தற்போது இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு 900 மில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை குறுகிய கால நெருக்கடியாக மத்திய வங்கி விளக்குவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மத்திய வங்கி ஆளுநருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“தற்போதைய அரசாங்கம் சீனாவிடமிருந்து அதிக கடன்களைப் பெறுவதற்கு நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சூழ்நிலை காரணமாக நாடு திவாலாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இலங்கைக் கடன்களின் நிலைத்தன்மையை ஆராய்ந்து அவற்றை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் மீது எதிர்க்கட்சிகளுக்கு பொறுப்பு இருப்பதால் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு தமது கட்சி முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நெருக்கடியில் அரசியல் கட்சிகள் எந்தவித பாகுபாடும் இன்றி தங்கள் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தினால், அது இந்த நெருக்கடிக்கு ஒரு தீர்வை ஏற்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார கொள்கை குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.