ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிராக தற்காத்துக் கொள்ள பிரித்தானியா உக்ரைனுக்கு ஆயுத விநியோகத்தை அதிகரித்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய படையெடுப்பிற்கு முன்னர் 2,000 இலகுரக எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்கிய பிரித்தானியா தற்போது 1,615 எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட தூரம் செல்லும் ஏவுகணைகளின் சிறிய அளவிலான ஆயுதங்களை வழங்குவதாகவும், தரையிலிருந்து வான் நோக்கிச் செல்லும் ஏவுகணைகளை அனுப்புவதைப் பார்த்து வருவதாகவும் பென் வாலஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிறிய ஆயுதங்கள், உடல் கவசம் மற்றும் மருத்துவப் பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, ரஷ்ய கவசங்களை அழிக்க பிரித்தானியா வழங்கிய ஆயுதங்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதற்கான சில சான்றுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து நாடாளுமன்றில் பேசிய பென் வாலஸ்,
உக்ரைனில் பொது மக்கள் இருக்கும் இடங்களில் ரஷ்யா மேற்கொள்ளும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் மற்றும் விமான தாக்குதல்கள் பயங்கரமான பேரழிவை எவ்வாறு ஏற்படுத்தியது என்பதை விவரித்தார். ரஷ்யர்கள் தங்கள் தந்திரோபாயங்களை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.
உக்ரைனின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, அதிவேக ஸ்டார்ஸ்ட்ரீக் ஆளில்லா கையடக்க விமான எதிர்ப்பு ஏவுகணைகளை அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.
இதேவேளை, உக்ரைனுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த இராணுவ உபகரணங்களின் மற்றொரு கப்பல் ஒன்றை அனுப்புவதற்கு கனடா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.