இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவது அதிகரித்து வருவதாகவும், வீதி விளக்குகளை அணைப்பது நிலைமையை மோசமாக்கும் எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பகலில் மற்றும் மின்சாரம் தடைப்படும் போது பெண்கள் பல்வேறு வகையான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் நாட்டில், இரவில் தெரு விளக்குகளை அணைப்பது பெரும் பிரச்சினையாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இந்த முடிவு சமூகத்தில் பல பிரச்சினைகளை ஏற்படுத்துவதோடு பெண்களை மிகவும் பாதுகாப்பற்றவர்களாக மாற்றும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி விசாகா சூரியபண்டார தெரிவித்தார்.
இது நுண்ணுணர்வுடன் பார்க்கப்பட வேண்டிய விடயம் எனவும், இவ்வாறான நெருக்கடியான நிலையில் அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களினால் பாதிக்கப்படும் தரப்பினர் மீது கவனம் செலுத்துவது சமூகத்தின் பொறுப்பு எனவும் மகளிர் ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி கலா பீரிஸ் தெரிவித்தார்.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரவையின் தலைவி இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேவிடம் கேட்டதற்கு, இது உண்மையில் பெண்களை மிகவும் பாதுகாப்பற்ற முறையில் பாதிக்கிறது என்றார்.
நாட்டில் நிலவும் சூழ்நிலையில், தெரு விளக்குகளை அணைப்பது குற்றமல்ல, ஆனால், பெண்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு ஆளாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை, அனைத்து வீதி விளக்குகளையும் எதிர்வரும் 31ம் திகதி வரை செயற்படுத்தாதிருக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அண்மையில் அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.