இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை மற்றும் நாளை மறுநாள் கொண்டாடப்படுவதையொட்டி நாளை காலை ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 100 பக்தர்கள் நான்கு விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப்படகில் கச்சத்தீவு புறப்பட ஏற்பாடாகியுள்ளன. அதற்கான முழு ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் பக்தர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும், கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின் பற்றி கச்சத்தீவு ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளை யாழ்பாணம் மாவட்டத்தின் கீழ் உள்ள நெடுந்தீவில் பங்குதந்தை வசந்தன் தலைமையில் இலங்கை பக்தர்கள் 50 பேர் திருவிழாவில் கலந்து கொள்ள ஏற்பாடாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளை மாலை 5 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி பின் தேர் பவனி, பிராத்தனைகள் நடைபெறும். சனிக்கிழமை காலை இலங்கை இந்திய பங்கு தந்தைகளின் கூட்டு திருப்பலியுடன் திருவிழா நிறைவடைகிறது.
இதற்கான முழு ஏற்பாடுகளை இலங்கை யாழ்பாணம் மாவட்டம் நெடுந்தீவு நிர்வாகம் மற்றும் இலங்கை கடற்படை சார்பில் செய்யப்பட்டுள்ளது.
கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ள செல்லும் இலங்கை இந்திய மீனவர்களை ஒன்றினைத்து மீனவர் பிரச்சினை குறித்து இலங்கை மீன் பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தப்பட உள்ளதாக திருவிழாவில் கலந்து கொள்ள செல்லும் இந்திய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.