ரஸ்ய உக்ரைன் போர் இன்று இரண்டாவது வாரத்தைக் கடக்கத் தொடங்கியுள்ளது. 20 லட்சம் வரையான உக்ரைன் மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். உக்ரைன் நகரங்கள் ஒவ்வொன்றாக ரஸ்யாவிடம் விழுந்து கொண்டிருக்கின்றன. மிக மெதுவாக ஆனால் காத்திரமான வகையில் ரஸ்யா முன்னேறிக் கொண்டிருக்கின்றது. அமைதிக்கான பேச்சுவார்த்ததைகள் தொடர்ந்து நடந்தாலும் அவையெல்லாம் தோல்வியில் முடிந்துள்ளன. தனது இலக்கு நிறைவேறும் வரை ரஸ்யா போரை நிறுத்தும் எனக் கூறுவதற்கில்லை. ரஸ்ய அதிபர் கத்திக்காரன் மட்டுமல்ல வித்தைக்காறனும் கூட. அவர் என்ன நேரம் என்ன செய்வார் என எவரும் எதிர்வு கூற முடியாது. முன்னாள் சோவியத் உளவுப்பிரிவின் தலைவரான அவர் கத்தியை விட வித்தையிலேயே அதிக நம்பிக்கை கொண்டவர்.
உக்ரைன் தொடர்பான போர் முயற்சியை ரஸ்ய அதிபர் கட்டம் கட்டமாகவே மேற் கொண்டார். சிரியா யுத்தத்தில் தலையிட்டதன் மூலம் சிறந்த போர்ப்பயிற்சி கிடைத்தது. புதிய ஆயுதங்கள் பரீட்சித்தும் பார்க்கப்பட்டன. ஒரு வகையில் சிரியா தலையீடு அமெரிக்காவிற்கு வழங்கப்பட்ட சிக்னல் என்றும் கூறலாம். “நானும் தயாராகி விட்டேன்” என்பது தான் அந்த சிக்னல். இரண்டாவது சிக்னல் கிரிமியாவை கைப்பற்றிய போது காட்டப்பட்டது. அது அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்திற்கு காட்டப்பட்ட சிக்னல் மட்டுமல்ல உக்ரைனுக்கும் காட்டப்பட்ட சிக்னல் தான். அந்த சிக்னல் மொழியை உக்ரைன் ஒழுங்காக புரிந்துகொள்வில்லை. நேட்டோ தன்னைப் பாதுகாக்கும் என அதீத நம்பிக்கையுடன் உக்ரைன் இருந்தது. இன்று அந்த நம்பிக்கை எல்லாம் தவிடுபொடியாகிவிட்டது.
அமெரிக்காவுக்கும் மேற்குலகத்திற்கும் இரண்டு நபர்களில் அதிக பயம். ஒன்று வடகொரியா அதிபர். இரண்டாவது ரஸ்ய அதிபர். இருவரும் சொல்வதைச் செய்வார்கள். அணு ஆயுதம் பயன்படுத்துவேன் என்று கூறினால் பயன்படுத்தியே முடிப்பர். தென்கொரியாவிற்கு இவை நன்கு புரியும் என்பதால் தான் போர்ச்சூழல் ஏற்படும்போதெல்லாம் எப்படியாவது அதனைத் தவிர்த்துவிடுகின்றது. தென்கொரிய அதிபருக்கு இருந்த இக் கெட்டித்தனம் உக்ரைன் அதிபருக்கு இருக்கவில்லை.
போரை ரசிக்க முடியாது என்பது உண்மைதான். அது தரும் வலி கொஞ்சநஞ்சமல்ல. போர் நடக்கும் நாடுகளில் மட்டுமல்ல அதனைக் கடந்தும் அது வலியைக் கொடுக்கக் கூடியது. இன்று உக்ரைன் போரினால் அதனுடன் எந்தவித தொடர்பும் இல்லாத இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தங்கள் வாழ்வாதாரத்தை பேணுகின்ற மலையக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேயிலையை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளாக ரஸ்யாவும், உக்ரைனும் இருக்கின்றன. உல்லாசப் பயணத் துறையிலும் ரஸ்யாவினதும் உக்ரைனினதும் பங்கு அதிகமானது.
போர் என்பது அரசியலின் விளைவு. வெறுமனவே மனிதாபிமான நெருக்கடிகளைப் பார்த்து ஒப்பாரி வைப்பதால் போரை ஒருபோதும் நிறுத்திவிட முடியாது. அதன் பின்னாலுள்ள அரசியல் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதனைத் தீர்ப்பதன் மூலமே போரைத் தவிர்க்க முடியும். சிலவேளை போரில் ஒரு தரப்பு தற்காலிகமாக வெற்றியடையலாம். ஆனால் அரசியல் பிரச்சினை தீராவிட்டால் போர் வேறு வகைகளில் தொடரவே செய்யும். இலங்கையில் அருவருக்கத் தக்க இன அழிப்பின் மூலம் பெருந்தேசியவாத அரசு போரில் வெற்றி கண்டது. ஆனால் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. இன்று வேறோர் வகையில் போர் தொடர்கின்றது. ஆயுதப் போரில் வெற்றி கண்ட பெரும் தேசியவாத அரசு தற்போது வேறு வகைகளில் தொடரும் போரினால் தனது இருப்பையே பாதுகாக்க முடியாமல் திணறுகின்றது.
ரஸ்ய – உக்ரைன் போரைப் பொறுத்தவரை இரண்டு அரசியல் பிரச்சினைகள் உள்ளன. ஒன்று உக்ரைனில் வாழும் ரஸ்ய இனத்தவர்களின் தேசிய இனப் பிரச்சினை. இரண்டாவது ரஸ்யாவின் தேசியப் பாதுகாப்புப் பிரச்சினை. இது இலங்கைப் பிரச்சினை போன்றது தான். இலங்கையிலும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை உள்ளது. அதேவேளை இந்தியாவின் தேசியப் பாதுகாப்புப் பிரச்சினையும் உள்ளது. இரண்டும் சேர்ந்துதான் பிரச்சினையின் உக்கிரத்தை தீர்மானிக்கின்றது. எவ்வாறு வரலாற்று ரீதியாக புனைவுகள், ஐதீகங்களுடன் இந்திய எதிர்ப்பு சிங்கள மக்களிடம் வேரூன்றி உள்ளதோ அதே போல ரஸ்ய எதிர்ப்பு உக்ரைன் பெரும்பான்மை மக்களிடம் வேரூன்றி உள்ளது.
உக்ரைனில் ரஸ்யாவின் எல்லையை ஒட்டிய கிழக்குப் பகுதியில் ரஸ்ய இனத்தவர்கள் வாழ்கின்றனர். சோவியத் யூனியன் காலத்தில் உக்ரைனில் ரஸ்ய எதிர்ப்பை பலவீனப்படுத்துவதற்காக ரஸ்ய இனத்தைச் சேர்ந்தவர் கிழக்குப் பகுதியில் குடியேற்றப்பட்டனர் என்ற கதைகளும் உண்டு. ரஸ்ய மக்கள் கிழக்குப் பகுதியில் வாழும் இந்த ரஸ்ய இனத்தவர்களுடன் தொப்புள்கொடி உறவுகொண்டவர்கள். ஈழத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் தொப்புள்கொடி உறவு இருப்பது போல. உக்ரைனின் மேற்குப் பகுதியில் உக்ரைன் வம்சா வழியினர் வாழ்கின்றனர். நாடு முழுவதிலும் பெரும்பான்மை அவர்கள்தான். உக்ரைன் தனி நாடாக வந்த காலம் தொடக்கம் கிழக்குப் பகுதியல் ரஸ்ய இனத்தவர்கள் கொடுரமாக ஒடுக்கப்ட்டனர். இதற்கு எதிராக ரஸ்ய இன மக்கள் மேற்கொண்ட கிளர்ச்சிகள் கொடுரமாக நசுக்கப்பட்டன. இந் அடக்குமுறைச் செயற்பாட்டில் உக்ரைன் அரசு மட்டுமல்ல அதனுடன் இணைந்து செயற்படும் வலதுசாரிக்குழு ஒன்றும் உள்ளடக்கம். இந்த வலதுசாரிக்குழு இரண்டாம் உலக யுத்த காலத்தில் கிட்லர் ரஸ்யா மீது படையெடுத்த போது கிட்லரின் படையினை வரவேற்ற குழுவாகும்.
கிழக்குப் பிரதேச ரஸ்ய இன மக்களுக்கும் ரஸ்யாவில் வாழும் ரஸ்ய இன மக்களுக்கும் இடையே தொப்புள் கொடி உறவு இருப்பதால் கிழக்குப் பிரதேச மக்களின் அபிலாசைகளை ரஸ்ய ஆட்சியாளர்களினால் இலகுவில் புறக்கணித்துவிட முடியாது. அது ரஸ்யாவின் உள்ளக அரசியலில் பல நெருக்கடிகளை உருவாக்கும்.
தமிழ்நாட்டு மக்களின் ஈழத் தமிழர்கள் தொடர்பான உணர்வுகளை இந்திய மத்திய அரசு புறக்கணிக்க முடியாதோ அது போலத்தான் இதுவும். இந்தியாவில் தமிழ்நாடு ஒரு மாநிலம் மட்டும்தான். இதனால் மத்திய அரசு சற்றுப் பின்வாங்கலாம். ஆனால் ரஸ்யா முழுவதும் ரஸ்ய இனத்தவர்கள் வாழ்வதால் ரஸ்ய ஆட்சியாளர்களினால் பின்வாங்க முடியாது.
இரண்டாவது ரஸ்யாவின் தேசியப் பாதுகாப்புப் பிரச்சினையாகும். சோவியத்யூனியனை பல நாடுகளாக உடைத்ததில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்திற்கும் அதன் பாதுகாப்பு அமைப்பான நேட்டோவிற்கும் பெரும் பங்கு உண்டு. அது தொடர்பான பாரிய அதிர்ப்தி சோவியத் உளவுப் பரிவின் தலைவரான தற்போதைய அதிபர் புடினுக்கு அதிகம் உண்டு. உக்ரைன் ஒரு தனிநாடல்ல என புடின் கூறுவதற்கும் இதுவே காரணம்.
இன்று அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் ரஸ்யாவை துண்டு துண்டாக உடைப்பதில் அக்கறை செலுத்துவதாக வலுவான கருத்து உண்டு. சோவியத் யூனியன் உடைந்தாலும் ரஸ்யா தற்போதும் உலகில் பெரிய நாடுகளில் ஒன்றாகவே உள்ளது. ஐரோப்பா, ஆசியா, என அதற்கு எல்லைகள் உள்ளன. இந்த பெரிய நாடு என்ற நிலைதான் உலக வல்லரசு என்ற நிலைக்கு அதனை உயர்த்தியுள்ளது. இந்த பெரிய நாட்டை பாதுகாக்க வேண்டிய தேசியப் பாதுகாப்புப் பிரச்சினை அதற்கு உண்டு. நேட்டோ அமைப்பு 1949ம் ஆண்டு அமெரிக்கா சார்பு நாடுகளை கம்யூனிச அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் விதிகளின்படி நேட்டோ நாடுகளில் ஒன்றை வேறு நாடுகள் தாக்கினால் ஏனைய நேட்டோ நாடுகள் இணைந்து அதற்கு பதிலடி கொடுக்கலாம். இந்த நேட்டோ அமைப்பில் முன்னைய சோவியத் யூனியனில் இருந்து போன பல நாடுகள் அங்கம் வகின்றன. ஏற்கனவே நேட்டோவிற்கு எதிராக சோவியத் யூனியன் தலைமையில் வார்சோ அமைப்பு 1955 இல் உருவாக்கப்பட்டது. அதில் அங்கம் வகித்த பல நாடுகள் நேட்டோவில் அங்கம் வகிக்கும் நிலை வளர்ந்து தற்போது சோவியத் யூனியனில் அங்கமாக இருந்த நாடுகளும் அங்கத்துவம் வகிக்கும் நிலை தோன்றியுள்ளது. வார்சேர் என்பது போலந்தின் தலைநகரமாகும். வார்கோ அமைப்பு அங்கு உருவாக்கப்பட்டதனாலேயே அந்தப் பெயர் உருவானது. இன்று போலந்து நேட்டோவில் ஒரு அங்கத்துவ நாடாக உள்ளது.