அரசாங்கத்தின் பிரபல்யம் குறித்த சமீபத்திய அறிக்கையை புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்தவர்களில் மூன்று தொடக்கம் நான்கு வீதமானோர் தினசரி அரசாங்க சார்பு பதவிகளை விட்டு வெளியேறுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரபல்யம் 17 வீதம் அதிகரித்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான அவர்களின் எதிர்ப்பால் இவ்வாறு பிரபல்யம் அதிகரித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளதார நெருக்கடி காரணமாக எரிபொருள், எரிவாயு, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களில் விலை சடுதியாக உயர்ந்துள்ளது. மேலும் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடி காரணமாக மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு வருவகையும் காணமுடிகின்றது.