அரசின் பட்டதாரி பயிலுனர் திட்டத்தில் இணைக்கப்பட்டு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படாத திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 240 பேருக்கும் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“பட்டதாரி பயிலுனர்கள் விடயம் தொடர்பாக இதற்கு முன்னர் நான் தங்களுக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுத்தமைக்கு எனது மனம் நிறைந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
பட்டதாரி பயிலுனராகப் பணியாற்றிய பலருக்கு நாடளாவிய ரீதியில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் 240 பேர் தவிர்ந்த ஏனையோருக்கும் இந்த நிரந்தர நியமனம் கிடைக்கப் பெற்றுள்ளது.
எனினும், நிரந்தர நியமனம் கிடைக்கப் பெறாத திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 240 பேரினதும் தகவல்கள் அமைச்சின் தரவுத்தளத்தில் இற்றைப்படுத்தப்படாமையே நிரந்தர நியமனத்தில் இருந்து இவர்கள் விடுபட்டமைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் என்னை நேரில் சந்தித்த திருகோணமலை மாவட்ட பட்டதாரி பயிலுனர் சங்க பிரதிநிதிகள் விடுபட்ட பயிலுனர்களின் பெயர்ப்பட்டியலை பிரதேச செயலக ரீதியாக என்னிடம் ஒப்படைத்துள்ளனர். அந்தப் பெயர்ப் பட்டியல் தங்களது மேலான கவனத்திற்காக இதனுடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகின்றது.
எனவே, இதனைக கவனத்தில் இந்தப் பட்டதாரி பயிலுனர்களுக்கும் நிரந்தர நியமனம் கிடைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்”.எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.