தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசர பேச்சுவார்த்தைக்கு இம்மாதம் 15ம் திகதி ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள நிலையில், இரா. சம்பந்தனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவசர கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவசரமாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து குறுகிய கால அவகாசத்தில் அழைத்திருக்கிறார். இது சம்பந்தமாக எமது கட்சியின் அரசியல் உயர்பீடம் நடாத்திய ஆய்வின் அடிப்படையில் பின்வரும் கருதுக்களை முன்வைக்கின்றோம்.
இலங்கை அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது அவசியம் என்பதை ஏற்றுக்கொண்ட பொழுதிலும் இந்த நேரத்திலே அரசாங்கம் எம்மை அழைத்து இருப்பதென்பது எங்களை ஒரு பகடைக் காயாகப் பாவித்து சர்வதேச மற்றும் உள்ளக அரசியல் அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நடவடிக்கையாக அமைந்துவிடும் என்று நாங்கள் கருதுகின்றோம்.
ஜனாதிபதி பதவியேற்ற காலத்திலிருந்து தான் சிங்கள-பௌத்த மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர் எனவும் அவர்களுடைய கருத்துக்களுக்கும் அபிலாசைகளுக்குமே முன்னுரிமை வழங்குவேன் என்றும் தெரிவித்து வருவதோடு மட்டுமல்லாமல் அந்த வகையிலே தான் அவருடைய நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன.
குறிப்பாக தமிழர்களுடைய காணிகளை பல்வேறு திணைக்களங்களின் ஊடாக கையகப்படுத்தி வருவதோடு நவீன முறையிலே குடிப்பரம்பல் சிதைப்பையும் திட்டமிட்ட வகையில் ஒரு காலமும் இல்லாத வகையில் நிறைவேற்றி வருகின்றார்.
எமது கோரிக்கைகள் போராட்டங்கள் எல்லாம் பயனற்றவையாகவே போயிருக்கின்றன. ஓரினத்தின் தலைவரே தாமும் இந்த அரசும் என்ற அவரின் நிலைப்பாடு நல்லிணக்கதிற்கோ பொறுப்புக் கூறலுக்கோ வழியமைக்காது.
அத்துடன் மற்றைய இனங்களின் அங்கீகாரத்தையும் மறுதலிப்பதோடு இனப்பிரச்சினை தீர்வுக்கான கதவுகளையும் மூடி நிற்கிறது. இலங்கையில் தமிழ் மக்களுக்கு இனபிரச்சினை இல்லை பொருளாதாரப் பிரச்சினையே இருக்கின்றது என்று ஐ.நா வரையில் ஜனாதிபதியும் மற்றும் பல இடங்களில் அவர் சார்ந்தோரும் தெரிவித்து வருகின்றார்கள்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை உண்டு என்பதையும் அதற்கான தீர்வு அவசியம் என்பதையும் ஜனாதிபதி தனது நிலைப்பாடாக வெளிப்படுத்துவது அவசியம் என நாம் கருதுகின்றோம். அத்தோடு பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமை ஆகிய விடயங்களில் அரசாங்கம் எந்தவித அக்கறையும் செலுத்தாமல் செயல்பட்டு வருகின்றது.
கடந்த ஐ.நா மனித உரிமை பேரவை அமர்வில் மனித உரிமைக்கான உயர்ஸ்தானிகர், இலங்கை அரசாங்கம் மனித உரிமை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகிய விடயங்களில் பாரிய பின்னடைவை சந்தித்து வருகிறது என்று தெரிவித்து இருப்பதோடு சர்வதேச நீதிப் பொறிமுறையின் முன் இலங்கையை பாரப்படுத்துமாறு மனித உரிமை பேரவை அங்கத்துவ நாடுகளுக்கு வலியுறுத்தியிருக்கிறார். எமக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் நாடுகளும் அந்த நிலைப்பாட்டிலே கவனம் செலுத்துகின்றார்கள். குறிப்பாக இந்தியா, ஐநா மனித உரிமைப் பேரவையின் நடந்துமுடிந்த கூட்டத்தொடரில் காத்திரமான அறிக்கையை வெளியிட்டிருக்கின்றது.
தங்கள் தலைமையிலே தமிழ்தேசிய பரப்பில் செயலாற்றும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்ட அனைத்து கட்சிகளும் ஒருமித்து அண்மையில் இந்தியாவிற்கு முன்வைத்த கோரிக்கைக்கு பின்னர் இந்திய தரப்பில் ஏற்பட்டிருக்கும் பாரிய மாற்றத்தினை இது எடுத்துக்காட்டியுள்ளது.
தமிழ் மக்களுடைய நியாயமான அபிலாசைகளை தீர்க்கக்கூடிய அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமை விடயங்களிலும் இலங்கையை தாங்கள் வலியுறுத்துவதாக இந்தியா தெரிவித்திருப்பது எம்மக்களுக்கு நம்பிக்கை தரும் விடயமாக இருக்கிறது.
இந்தச் சூழல் ஒருபுறமிருக்க, சர்வதேச அரசியலிலும் உள்ளக பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கும் அரசாங்கம் முகம் கொடுத்து இருக்கின்றது. எமது மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாகவும், எமது இனப்பிரச்சினை சம்பந்தமாகவும் முடிவுகளை எடுப்பதற்கு பல தடவைகள் நாங்கள் கோரிக்கைகளை விடுத்தும் எங்களை உதாசீனம் செய்த ஜனாதிபதி இன்று எங்களை அழைத்திருப்பதானது அவர்கள் முகம் கொடுத்து இருக்கக்கூடிய சிக்கல்களில் இருந்து தங்களை விடுவிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பை பயன்படுத்த நாங்கள் இடமளிக்க முடியாது. அது எங்களுடைய மக்களும், எமது மக்களுக்காக இந்தியாவும், சர்வதேசமும், நாங்களும் எடுத்து வரும் முயற்சிகளுக்கு பின்னடைவாக அமைந்துவிட ஒருபோதும் இடமளித்து விடக்கூடாது என்பதில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்.
மேலே குறிப்பிட்ட நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களை அரசாங்கம் நிராகரித்தும் அதை செயல்படுத்த முடியாது என்றும் உறுதிபட தெரிவித்து வருகிறார்கள்.
எனவே இந்த சந்திப்பு எந்த அளவிற்கு தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதில் நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம். இந்தப் பின்னணியில் நல்லிணக்க நடவடிக்கையாக அரசாங்கம் தமது தரப்பில் செயற்படுத்தக் கூடிய விடயங்களான காணி அபகரிப்பை முற்றாக நிறுத்துதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், அரசியல் கைதிகள் உடனடி விடுதலை, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான பதில் உட்பட, குறிப்பாக ஐநா மனித உரிமைப் பேரவையின் பிரேரணையில் கூறப்பட்ட பல விடயங்களில் ஏதாவது ஒரு சில விடயங்களை நிறைவேற்றுவதன் மூலம் ஒரு காத்திரமான எமது மக்களுக்கு நம்பகத்தன்மையான சூழலை ஏற்படுத்துவதே பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல வழிவகுக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.
அப்படிப்பட்ட நல்லிணக்க நடவடிக்கையை அரசாங்கம் நிறைவேற்றிய பின்னர் இந்த சந்திப்பில் கலந்து கொள்வது எமது இனத்துக்கு ஆதரவாக செயற்பட்டு கொண்டிருக்க கூடிய இந்தியா உட்பட சர்வதேச நாடுகளுடைய முயற்சிக்கு வலுசேர்த்து எமது மக்களுக்கு காத்திரமான அரசியல் தீர்வையும், நீதியையும் பெற்றுத் தருவதற்கு வழிவகுக்கும் என்று நம்புகின்றோம்.
கடந்த காலங்களில் ராஜபக்ச தலைமையிலான அரசோடு பேச்சுவார்த்தை நடாத்திய அனுபவங்களையும் இங்கு நினைவு கூருவது பொருத்தமானது. ஆகவே தாங்கள் இவற்றை கருத்திற்கொண்டு அரச தரப்பில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க சமிக்ஞையின் செயற்பாட்டின் அடிப்படையில் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதே ஆக்கபூர்வமானதாக அமையும் என்பதை அரச தரப்பிற்கு தற்போதைய சூழலில் எமது நிலைப்பாடாக தெரிவிப்பதே எமது மக்கள் நலன் சார்ந்ததாக அமையும். தாங்கள், மேற்கூறிய விடயங்களை கவனத்தில் எடுத்து இவ்விடயத்தில் செயலாற்ற வேண்டுமென மிக அக்கறையுடன் கோருகிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.