சரியான பொருளாதார ஆலோசகர்களின் கருத்துக்களை இந்த அரசாங்கமும், ஜனாதிபதியும் கேட்காமல் இராணுவ பிரசன்னத்துடனும், இராணுவ தளபதிகளை நியமனம் செய்து தனது அமைச்சுகளை நடத்தியதன் விளைவு இந்த நாடு அதளபாதாளத்திற்குள் போனது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கக் கோரி மக்களின் கையெழுத்து பெறும் நிகழ்வில் கலந்துகொண்டு பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்விடயத்தினை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
”இன்று இலங்கை அரசாங்கம் பல்வேறுபட்ட நெருக்கடிகளை நாட்டில் வாழ்கின்ற மக்களிற்குக் கொடுத்திருக்கின்ற இந்த சூழலில், மிக முக்கியமாக நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. மக்கள் அன்றாட சீவியங்களை நடாத்த முடியாதவர்களாக மாறியிருக்கின்றார்கள். எரிபொருட்களின் விலை உச்சத்தைத் தொட்டிருக்கின்றது.
அன்றாட உணவுப்பொருட்கள் மக்களின் வாழ்வில் பெருத்த அடியை அடித்திருக்கின்றது. எதிர்காலத்தில் இங்கு வாழ முடியுமான என இவையெல்லாம் மக்கள் மத்தியில் கேள்விக்குட்படுத்தியிருக்கின்றது.
2019, 2020களில் கோவிட் நோய் இந்த நாட்டை ஆக்கிரமித்திருக்கின்றபொழுது, இந்த அரசு சர்வதேச நியமங்களிற்குட்பட்ட தடுப்பு முறையைக் கையாளாமல் பாணி மருந்துகளையும், மந்திரங்களையும், தண்ணீரைக் கொண்டு சென்று ஆற்றில் ஊற்றம் வித்தைகளை மாத்திரமே இந்த மண்ணில் சொல்லிவந்ததேயன்றி உலக சுகாதார நடைமுறைகளிற்குட்பட்டு, மருத்துவ ரீதியில் செயற்படாததும், பின்னர் அதனை உணர்ந்து உலக சந்தையில் அந்த மருந்துகளைப் பெறும்பொழுது உலக சந்தையில் அதன் பெறுமதி டொலர்களால் அதிகமானது.
அதனால் அன்று செலவிட்டிருக்கவேண்டிய தொகையைவிட தற்பொழுது தடுப்பூசிக்காக இரண்டு அல்லது மூன்று மடங்கு தொகையை இலங்கை செலவிட்டுக்கொண்டிருக்கின்றது. இலங்கையின் இவ்வாறான திட்டமிடப்படாத செயற்பாடுகள் பாரிய பின்னடைவுக்குள் நாட்டை தள்ளியிருக்கின்றது.
அதனால்தான் இந்த நோயைக்கூடப் பூரணமாகக் கட்டப்படுத்த முடியவில்லை. நாட்டின் பொருளாதாரத்தைச் சீராகக் கொண்டு செல்வதற்குச் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசி ஒரு நிலைப்பாட்டுக்கு வாருங்கள் எனக் கட்சித் தலைவர்கள், நிபுணர்கள் எனப் பலரும் கோரியிருந்தனர்.
ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் வாசல்களைத் தொடமாட்டோம், அவர்களுடன் பேசமாட்டோம் என்று சொன்ன அரசாங்கம் இப்பொழுது சர்வதேச நாணய நிதியத்தின் கதவுகளைத் தட்டுகின்றார்கள். இந்த நிலையானது இலங்கையின் பொருளாதார கொள்கை இல்லை என்பதையும், அதனைச் செயற்படுத்தக்கூடிய நிபுணர்கள் இல்லை.
இதேவேளை சரியான பொருளாதார ஆலோசகர்களின் கருத்துக்களை இந்த அரசாங்கமும், ஜனாதிபதியும் கேட்காமல் இராணுவ பிரசன்னத்துடனும், இராணுவத்தளபதிகளை நியமனம் செய்து தனது அமைச்சுகளை நடத்தியதன் விளைவு இந்த நாடு அதளபாதாளத்திற்குள் போயிருக்கின்றது.
இப்பொழுதாவது அவர்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றமையானது ஓரளவு தீர்வு கிடைக்கும் என்று நம்பலாம்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதியுடன் திட்டமிட்ட வகையில் பேச்சுக்கள் இடம்பெறுமா என அவரிடம் வினவியபோது அவர் தெரிவிக்கையில்,
”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூறியதுபோன்று திட்டமிடப்பட்ட திகதியில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை இடம்பெறும், சில கட்சிகளின் கருத்துக்கள் தொடர்பில் திரும்பத் திரும்பப் பதிலளித்து விரிசலையும், கருத்து முரண்பாட்டையும் தோற்றுவிக்க விரும்பவில்லை.
மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுதல், வனலாகா திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றால் காணிகள் சுவீகரிக்கப்படுதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்த தினத்தில் ஜனாதிபதியுடன் பேசப்படும்” என்கிறார்.