ஈழமக்கள் ஐனநாயக கட்சியினுடைய ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக ஒன்றுகூடிய அக்கட்சியினுடைய உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் வாயில் கதவை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அங்கு வந்த யாழ் மாவட்டச் செயலாளரிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மகஜரொன்றை கையளித்ததுடன், 10 நாட்களுக்குள் பிரச்சனைக்குரிய தீர்வு காணப்பட வேண்டுமெனவும் இல்லை எனில் முழுமையாக மாவட்ட செயலகத்தை முடக்குவோம் என போராட்டத்தில் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
யாழ் மாவட்ட அபிவிருத்திகளைப் பிரதேச ரீதியாக முன்னெடுக்கும்போது ஏற்கனவே அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபங்களைக் கணக்கில் கொள்ளாது தன்னிச்சையான செயற்பாடுகளில் மாவட்ட செயலகம் ஈடுபட்டு வருதால் மக்களின் அவசியத் தேவைகள் புறக்கணிக்கப்படுவதை மக்கள் பிரதிநிதிகளான எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
குறிப்பாகப் பிரதேச சபையை மையப்படுத்திய அபிவிருத்தி திட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் முழுமையாகப் புறக்கணிக்கப்படும் நிலை யாழ் மாவட்டத்தில் மட்டும் காணப்படுகின்றது. அத்துடன் மக்களின் நலன்கள் அனைத்தும் மக்களின் விருப்புக்கமைவான தெரிவுகளாகவே இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார்.
ஆனால் யாழ் மாவட்டத்தில் மாவட்ட செயலகம் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாகக் காணப்படுகின்றது. மாவட்ட செயலகத்தின் இவ்வாறான நிலைமை மக்களின் தேவை கருதிய செயற்பாடுகளுக்கு இடையூறாக இருப்பதைப் பிரதேச மக்கள், மக்கள் பிரதிநிதிகளாகிய எம்மிடம் நாளாந்தம் முறையிட்டநிலையில் போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளனர்.