‘முழு நாடும் அழிவில்: பொறுத்தது போதும், ஒன்றாய் அணித்திரளுங்கள்’ என்ற தொனிப்பொருளிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
மேல் மாகாணத்தின் 10 மார்க்கங்கள் வழியாக ஆர்ப்பாட்டப் பேரணியானது கொழும்பு காலி முகத்திடலை வந்தடைந்தது. முதல் பேரணி தெற்கிலிருந்து கொழும்புக்கு வெள்ளவத்தையிலிருந்து; கொழும்புத் திட்ட வீதி வழியாக ஆரம்பமாகியிருந்தது.
நீர்கொழும்பு வீதியூடாக வந்த இரண்டாவது பேரணியும் கண்டி வீதி வழியாக வந்த மூன்றாவது பேரணியும் பேலியாகொடையில் சந்தித்து கொழும்பை நோக்கி சென்றடைந்தது.
பாராளுமன்ற வீதி வழியாக கொழும்பை நோக்கி நான்காவது பேரணி வந்தது.
மத்திய கொழும்பிலிருந்து வந்த ஐந்தாவது பேரணியும் கொழும்பு தெற்கிலிருந்து வந்த ஆறாவது பேரணியும் ராஜகிரியவில் இணைந்து கொழும்பை நோக்கி சென்றது.
கொட்டாவை மற்றும் நுகேகொட ஆகிய பிரதேசங்களில் இருந்து ஹைலெவல் வழியாக வந்த பேரணியும் அதேபோன்று 120 பஸ் வழித்தடத்தினூடாக வந்த பேரணியும் காலிமுகத்திடலை நோக்கி சென்றடைந்தன.
அனைத்துப் பேரணிகளும் சுமார் 6.00 மணியளவில் கொழும்பு காலி முகத்திடலை அடைந்தன.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, திஸ்ஸ அத்தநாயக்க, சரத் பொன்சேகா, எரான் விக்ரமரத்ன, இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட எதிர்க் கட்சி எம்.பிகளும் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் சவப்பெட்டிகளை ஏந்தியவாறும் அரசாங்கத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் பாண் உள்ளிட்ட உணவுப்பொருட்களை ஏந்தியாவறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டாப் பேரணியானது ஜனாதிபதி செயலகத்தை சென்றடைந்ததன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டதுடன் ஜனாதிபதி செயலகத்துக்குள் உள்நுழைய முற்பட்ட நிலையில் அதனை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்; தடுத்து நிறுத்தினர்.
ஜனாதிபதி செயலகத்துக்குள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஆர்ப்பாட்டாக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் சவப்பெட்டியை எரித்தும் தீப்பந்தங்களை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.