நாட்டில் தற்போது மக்கள் அனுபவித்து வரும் கஷ்டங்களை பார்க்கும் போது, விடுதலைப் புலிகள் அல்லது பிரபாகரன் நாட்டை கைப்பற்றி, அவர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டிருந்தால், மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என எண்ண தோன்றுவதாக சிங்கள நடிகர் கயான் விக்ரமதிலக்க தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொலி பதிவில் அவர் இதனை கூறியுள்ளார். நான் மிகவும் யோசித்து பேசுகிறேன். இப்படி பேச வேண்டும் என்று நினைக்கவில்லை. நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை. அரசியல் என்பது முற்றிலும் வெறுத்து போயுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வர கயான் விக்ரமதிலக்க என்ற நானும் பெரும் பங்களிப்பை செய்தேன். சரள மொழியில் கூறுதென்றால் கடைக்கு போனேன். சொந்த பணத்தை செலவிட்டேன்.
நாட்டுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அதனை செய்தேன். எந்தப் பிரதிபலன்களை எதிர்பார்த்து, கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக பதவிக்கு கொண்டு வர கடைக்கு போகவில்லை.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையானது ஈஸ்டர் தாக்குதலை விட மோசமானது. ஈஸ்டர் தாக்குதல் நடந்த நேரத்தில் நாங்கள் பெரிதும் குழப்பமடைந்தோம்.
இந்த நாட்டுக்கு இப்படி நடக்கக் கூடாது என்ற எண்ணம் எமக்குள் இருந்தது. எனினும் இவை அனைத்து திட்டங்களுக்கு அமைய நடப்பவை என எனக்கு தோன்றுகிறது. காரணம் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து பின்னர், ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் அனைவரையும் விடுதலை செய்துள்ளது.
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்து மிக குறுகிய காலத்தில் 20வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து, இரட்டை குடியுரிமை கொண்டவரை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்தது. அவரை நிதியமைச்சராகவும் நியமித்துள்ளது. அந்த நிதியமைச்சர் தற்போது முழு நாட்டையும் நிர்வாகம் செய்து வருகிறார். நிர்வாகம் செய்வது எமக்கு பிரச்சினையல்ல.
விடுதலைப் புலிகள் அல்லது பிரபாகரன் இந்த நாட்டை கைப்பற்றி, அவர்களிடம் துப்பாக்கி சூட்டில் இறந்திருந்தால், இதனை விட சுகமாக இருந்திருக்கும் என எண்ண தோன்றுகிறது. நாட்டு மக்கள் தற்போது எரிவாயு வரிசைகளிலும் டீசல் வரிசைகளிலும் நிற்கின்றனர். மண் எண்ணெய் இல்லை. சாப்பிட பொருட்களை கொள்வனவு செய்ய வழியில்லை. டொலர் கையிருப்பு பூஜ்ஜியமாகியுள்ளது. நாடு என்ற வகையில் உலகத்தினர் முன்னால் எம்மை பிச்சைக்காரர்களாக ஆக்கியுள்ளனர்.
இது அறிந்தே செய்யும் வேலை என தோன்றுகிறது. ஜனாதிபதி நாட்டுக்கு உரையாற்ற உள்ளதாக செய்திகளை பார்த்தோம். நாட்டுக்கு உரையாற்றும் போது எவராவது எழுதிக்கொடுத்ததை கொண்டு வந்து கூற வேண்டாம் என ஜனாதிபதியிடம் கோருகிறேன். உங்களுக்கு முடிந்தால், ராஜினாமா செய்யுங்கள்.
இன்னும் இரண்டு ஆண்டுகள் உங்களுக்கு ஜனாதிபதி ஆசனத்தில் இருக்க முடியும். நிதியமைச்சருக்கும் இருக்க முடியும். அதன் பின்னர் ராஜபக்சவினர் எவருக்கும் மீண்டும் நாட்டின் ஆட்சி அதிகாரத்திற்கு வரக் கூடிய வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது.
மக்கள் விடுதலைப்புலிகளின் வெடி குண்டில் சிக்கி அல்லது ஈஸ்டர் தாக்குதலில் சிக்கி, அணு குண்டு வெடித்து முழு நாட்டில் வாழும் இரண்டு கோடியே 20 லட்சம் மக்களும் மாண்டு போயிருந்தால், இதனை விட சிறப்பாக இருந்திருக்கும்.
இப்படி சாப்பிடவும் பருகவும் முடியாது, தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப இயலாது, அன்றாடம் சாப்பிட ஒன்றும் இல்லாமல் மக்கள் பெரும் கஷ்டத்தில் உள்ளனர். அப்படியான மிக மோசமான நிலைமைக்கு நாடு சென்றுள்ளது.
இதனால், மக்கள் வெடி குண்டு அல்லது புலிகளின் தோட்டாக்களில் இறந்து போயிருந்தால், இதனை விட நலமாக இருந்திருக்கும். இந்த நாட்டின் மீதும் மக்கள் மீதும் சிறிதளவேனும் அன்பு இருக்குமாயின் தயவுசெய்து நீங்கள் ராஜினாமா செய்து விடுங்கள் எனவும் நடிகர் கயான் விக்ரமதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.