தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பின்போது போர் எதிர்ப்பு சுலோகத்தை எழுப்;பிய செயல், தாமாகவே எடுத்த முடிவு என்று ரஸ்ய செனல் வன் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் மரினா ஒவ்ஸ்யானிகோவா தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இரவு, தொலைக்காட்சி செய்தி ஒளிப்பரப்பின்போது செய்தி வாசிப்பாளரின் பின்னால் இருந்து போர் எதிர்ப்பு சுலோகத்தை தாங்கிய வண்ணம் அவர் தமது எதிர்ப்பை வெளியிட்டார்.
போர் தொடர்பில் ரஸ்யா பொய் சொல்கிறது. தமது பொய்களை சொல்ல நிர்ப்பந்திக்கப்பட்டமை குறித்து தாம் வெட்கப்படுவதாக அவர் அந்த சுலோகத்தில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர், 14 மணித்தியாலங்களாக விசாரணை செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றில் இருந்து வெளியேறினார்.
அவருக்கு நீதிமன்றம் 30ஆயிரம் ரூபிள் ரொக்கப்பணத்தை அபராதமாக விதித்தது.
இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், எதிர்ப்பை வெளிக்காட்டியது தமது சொந்த முடிவு என்று தெரிவித்தார்
ரஸ்யா ஆக்கிரமிப்பை நடத்தியமையை தாம் விரும்பவில்லை என்றும் எனவே தாம் தமது அந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் செய்தியாளர் குறிப்பிட்டார்.
தமக்கு சட்ட உதவிகள் செய்யப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், கைதுசெய்யப்பட்ட பின்னர் உறவினர்களையும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்கள் சரியாக உறங்கவில்லை என்று தெரிவித்த அவர், தமக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும் நாளையதினம், மேலதிக தகவல்களை வெளியிடப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.