2021ம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 13.03.2022 அன்று வெளியாகின.
நாடு முழுவதும் 2 ஆயிரத்து 943 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன் 3 லட்சத்து 40 ஆயிரத்து 507 மாணவர்கள் பரீட்சை எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா – இறம்பைக்குளம்
இதற்கமைய, வவுனியா – இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலய மாணவன், அரவிந்தன் அபிரான் மாவட்ட மட்டத்தில் 192 புள்ளிகளைப் பெற்று முதல் நிலை சித்தியினை பெற்றுள்ளார்.
குறித்த மானவனுக்கு பாடசாலை சமூகம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
வவுனியா – செட்டிக்குளம்,
வவுனியா மாவட்டம் செட்டிக்குளம் கோட்டத்தில் இம்முறையும் பாவற்குளம் படிவம்-3 கனிஸ்ட உயர்தர வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
2021ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 17 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்ததுடன், 07 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
செட்டிகுள கோட்டத்தில் கூடிய தொகை வெட்டுபுள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட பாடசாலை இதுவாகும்.
அந்தவகையில், ஜ.சன்சிகன் 166 புள்ளிகளையும், வ.சபிதா 165 புள்ளிகளையும், ம.ரெஜினோல்ட் 163 புள்ளிகளையும், ஈ.கொன்ஸ்ரன் 162 புள்ளிகளையும், ர.தரணிகா 161 புள்ளிகளையும், கி.பவிசனா 155 புள்ளிகளையும், ஜோ. ஜொய்சியா 151 புள்ளிகளையும் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இதேவேளை, கடந்த வருடமும் வெட்டு புள்ளிகளுக்கு மேல் 05 மாணவர்கள் சித்தியடைந்து செட்டிகுள கோட்டத்தில் அதிக மாணவர்கள் சித்தி பெற்றுக்கொண்ட பாடசாலையாகத் திகழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டகளப்பு,
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 452 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுச் சித்தியடைந்துள்ளதாக மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் சுஜாதா. குலேந்திரகுமார் தெரிவித்தார்.
வெளியான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
2020ஆம் ஆண்டு 433 மாணவர்கள் சித்தியடைந்திருந்த நிலையில் 2021ஆம் ஆண்டு தோற்றிய மாணவர்களில் 452மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தில் 65 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதுடன்,கல்வி வலயத்தில் அதிக மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுச் சித்தியடைந்த பாடசாலையாகியுள்ளது.
இதேபோன்று வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையில் 52 மாணவிகளும்,சிசிலியா பெண்கள் பாடசாலையில் 57 மாணவிகளும்,புனித மைக்கேல் கல்லூரியில் 54 மாணவர்களும் மத்திய கல்லூரியில் 47 மாணவர்களும் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
கல்வி கோட்டத்தின் அடிப்படையில் மண்முனை வடக்கு கோட்டத்தில் 364 மாணவர்களும் மண்முனைப்பற்று கோட்டத்தில் 73 மாணவர்களும் ஏறாவூர்ப்பற்று கோட்டத்தில் 15 மாணவர்களும் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.