இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான முக்கிய குழுவுடன் முன்கூட்டியே திட்டமிடப்படாத சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பு இலங்கையின் வெளியுறவு அமைச்சில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
எனினும் இதன்போது பேசப்பட்ட விடயங்கள் வெளியாகவில்லை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வில், கனடா, ஜேர்மனி, வடக்கு மெசிடோனியா, மலாவி, மொன்டனீக்ரோ, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இலங்கை தொடர்பான முக்கிய குழு, இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகத்தின் முழுமையாக முன்னேற்றத்திற்காக அழைப்பு விடுத்தது.
அத்துடன் இலங்கையில் தொடர்ந்தும் செய்தியாளர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள் விடயத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு படையினரின் கண்காணிப்புகள் தொடர்பாக குறித்த குழு, தமது அதிருப்தியை வெளியிட்டது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘ஒரே நாடு ஒரே சட்டம்.ஆணைக்குழு காரணமாக இலங்கையின் பன்மைத்துவ சமூகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அபாயம் உள்ளதாக, முக்கிய குழு வலியுறுத்தியது.
இதேவேளை இலங்கை தொடர்பான 46-1 தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகக் கூறிய முக்கிய குழு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு முழுமையான ஒத்துழைப்பையும் வலியுறுத்தியது