திடீர் சுகயீனமடைந்த நிலையில் யாழ்.வேலணை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண் ஒருவர் உரிய சிகிச்சை வழங்கப்படாமையால் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை கொழும்புக்கு அனுப்பபட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி பொங்கல் தினத்தன்று அதிகாலை நீராடிய நித்தியா திருவருள் என்ற குடும்பப் பெண் திடீர் சுகவீனமுற்ற நிலையில் வேலணை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
எனினும் குறித்த தினத்தன்று வேலணை வைத்தியசாலையில் கடமையில் வைத்தியர் இல்லாத நிலையில் அம்புலன்ஸ் சாரதியும் இல்லாத சூழ்நிலையில் குறித்த பெண்ணை ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்நிலையில் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் சமூக அமைப்புகள் கண்டனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்த நிலையில் குறித்த விடயம் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் கரிசனை செலுத்திய வடமாகாண ஆளுநர் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரை குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்தார்.
இந்நிலையில் மூவர் அடங்கிய விசாரணைக்குழு குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு இறுதி அறிக்கையை சுகாதார அமைச்சிடம் கையளித்தது.
இவ்வாறு கையளிக்கப்பட்ட விசாரணை அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக மத்திய சுகாதார அமைச்சிடம் அறிக்கையை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது