காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரத்தை மூடி மறைக்க கூட்டமைப்பு முயற்சி – செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு…!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முட்டாள் தனமான கருத்தினை தெரிவித்திருக்கின்றார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன்  தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் யாழ்ப்பாண வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். மாவட்ட செயலக முன்றலில்  இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த நல்லாட்சி காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்து ஐ.நாவில் அரசாங்கத்தை காப்பாற்றி தன் மூலமே தற்பொழுது அரசாங்கமானது காணாமலாக்கப்பட்டோருக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரத்தை மூடி மறைக்க முற்படுகின்றது.

இதற்கு முண்டு கொடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தான். இதற்குரிய பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால் செல்வம் அடைக்கலநாதன் நேற்று ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். காணாமலாக்கப்பட்டோருக்கு அரசின் ஒரு லட்சம் ரூபா நட்ட ஈட்டினை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் ஒரு முட்டாள் தனமாக தெரிவிக்க முடியாது” எனவும்  தெரிவித்தார்.

இதேவேளை,யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மத ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்ட நிலையில் அதன் ஒரு அங்கமாக கந்தரோடை விகாரைக்கும் சென்று வழிபட தீர்மானித்திருந்தார்.

கந்தரோடை விகாரையில் பிரதமர் அடிக்கல் நாட்டுவதாக செய்தி வெளியான நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களும், தமிழ் தேசிய மக்கள் முன்ணணியும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திடீரென கந்தரோடை விகாரைக்கான தனது விஜயத்தை ரத்து செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin