திருகோணமலை, கண்டி வீதி தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்கு முன்பாக மின்சார பாவனையாளர் சங்கத்தினால் இன்று இரவு குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் மின் பாவனையாளர்களின் உரிமைக்கு என்ன நடக்கின்றது, அதிகரிக்கவிருக்கும் மின் கட்டண உயர்வினை உடன் நிறுத்து, மின்சாரத்தினை நேர்த்தியாக வழங்கு மற்றும் பல்வேறு பொருட்களுக்கான விலை உயர்வினை கண்காணி என்ற பதாதைகளை ஏந்தி தீப்பந்தம் ஏற்றியவாறு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
மேலும் ஆட்சி செய்ய தெரியாவிட்டால் வீடு செல்லுங்கள் அல்லது வெளிநாடுகளுக்குகாவது நாட்டை தாரைவார்த்து நீங்கள் வீடு செல்லுங்கள் அல்லது விலை உயர்வினை கட்டுப்படுத்துங்கள் என்று கோஷங்களை எழுப்பியவாறு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மின் பாவனையாளர் சங்கத்தின் தலைவர் ஐ.எ.கசுன் ரங்கன இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாளுக்கு நாள் விலைவாசிகள் அதிகரித்த வண்ணம் இருக்கும் இந்நிலையில் மின்சார கட்டணத்தை மேலும் அதிகரிப்பதற்கான முன்மொழிவுகள் முன்மொழியப்பட்டுள்ள நிலையில், மின் பாவனையாளர் சங்கம் என்ற வகை அதை நாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும் இதன்போது தெரிவித்தார். மேலும் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் மின்சார கட்டணத்தை 15 வீதத்தினால் அதிகரிப்பதாக அறிவித்துள்ள போதிலும் சாதாரண ஒரு கூலித் தொழிலாளியின் மின்கட்டணம் அல்லது ஒரு வர்த்தகரின் மின்கட்டணமானது 300 அல்லது 600 வீதத்திற்கும் மேலாக அதிகரிக்கப்படும் நிலை இதனால் உருவாகும் எனவும், இதற்கு அப்பால் மின் கட்டணத்தை உயர்த்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் பிரதேசங்கள், கிராமங்களுக்குச் சென்று பாரிய அளவில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராக உள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் தம்பலகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த பெரும்பாலான பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்தியவாறு நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசியினை கண்டித்து அரசாங்கத்திற்கு எதிராக குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.