






பிரதமரை வரவேற்கும் முகமாக கட்டப்பட்டு இருந்த பதாகைகளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எரித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
யாழ்ப்பாணத்திற்க்கு இரண்டு நாள் விஜயமாக நேற்றைய தினம் வருகைதந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை மட்டுவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வுக்கு பிரதமர் வருவதனை எதிர்த்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உள்ளிட்டோர் எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க முயன்றனர்.
நிகழ்வு நடைபெறும் இடத்தில் போராட்டத்தினை முன்னெடுக்க முல்லைத்தீவில் இருந்து , வந்திருந்தவர்களை மட்டுவில் அம்மன் ஆலயத்திற்கு அருகில் பொலிஸார் தடுத்து நிறுத்தி வாகனத்தில் இருந்து இறங்காதவாறு தடுத்து நிறுத்தி இருந்தனர்.
அதேவேளை யாழில் இருந்து சென்ற வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் மட்டுவில் வண்ணாத்தி பாலம் பகுதியில் தடுத்து நிறுத்திய பொலிஸார் அவர்களையும் வாகனத்தில் இருந்து இறங்காதவாறு தடுத்து நிறுத்தி இருந்தனர்.
இந்நிலையில் நிகழ்வினை முடித்துக்கொண்டு பிரதமர் நிகழ்விடத்தில் இருந்து புறப்பட்டதும் , போராட வந்தவர்களை பொலிஸார் செல்வதற்கு அனுமதித்தனர்.
அதனை அடுத்து வாகனத்தில் இருந்து இறங்கிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் , பிரதமரை வரவேற்று கட்டப்பட்டு இருந்த பதாகைகளை கிழித்து , தீயிட்டு எரித்து தமது எதிர்ப்பினையும் ஆற்றாமையையும் வெளிப்படுத்தினரர்.