உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 26வது நாளை எட்டியுள்ள நிலையில், மார்ச் 19ம் திகதி வரை உக்ரைன் தரப்பில் 902 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 1459 பேர் காயமடைந்திருப்பதாகவும், ஐ.நா.மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்ய இராணுவத்தால் புதைக்கப்பட்ட 90க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை தனது அபார மோப்ப சக்தியால் கண்டுபிடித்த ஜாக் ரசல் (Jack Russell) இன நாய், உக்ரைன் இராணுவ வீரர்கள் மத்தியில் கதாநாயகன் அந்தஸ்துடன் வலம் வருகின்றது.
பேட்ரன் (Patron) என பெயரிடப்பட்டுள்ள இந்த 2 வயது மோப்ப நாய், வெடிப்பொருட்கள் மற்றும் கண்ணிவெடிகளை கண்டறியும் அவசர சேவைகள் பிரிவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
சிறிய கவச உடையில் வலம் வரும் பேட்ரனுக்கு, பாலாடைக்கட்டிகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால், ஒவ்வொரு முறை கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கும் போதும் அதற்கு பாலாடைக்கட்டிகளை வழங்கி உக்ரைன் வீரர்கள் உற்சாகப்படுத்தியுள்ளனர்.