டுபாயில் இருந்து இலங்கைக்கு தங்கத்தை கடத்திவந்து அதனை யாழ்ப்பாணம் ஊடாக இந்தியாவுக்கு கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை மேற்பார்வை செய்யும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. திலகரத்னவின் கட்டுப்பாட்டில் இயங்கும் மனிதக் கடத்தல் மற்றும் சமுத்திர குற்ற விசாரணைப் பிரிவின் சிறப்புக் குழுவினரால் இந்த சட்ட விரோத நடவடிக்கை தொடர்பிலான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மனிதக் கடத்தல் மற்றும் சமுத்திர குற்ற விசாரணைப் பிரிவின் சிறப்பு விசாரணைகளுக்கு அமைய, கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த பஸ் வண்டி ஒன்று கொழும்பு – ஆமர் வீதி பகுதியில் வைத்து சிறப்பு பொலிஸ் குழுவினரால் மறித்து, இக்கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவரைக் கைது செய்து
விசாரணை நடத்தியபோது இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு (19) கைது செய்யப்பட்டதாக. பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ, இக்கடத்தலுடன் தொடர்புடைய யாழ்.மாதகல் பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒருவரை, மனிதக் கடத்தல் மற்றும் சமுத்திர குற்ற விசாரணைப் பிரிவின் குழுவினர் (20)கைது செய்ததாக குறிப்பிட்டார்.
ஆமர் வீதியில் வைத்து, யாழ்.நோக்கி சென்ற பஸ்ஸிலிருந்து சந்தேக நபரைக் கைது செய்யும் போது அவரிடமிருந்து 6 கிலோ வரை எடைக் கொண்ட சுமார் பன்னிரெண்டரை கோடி ரூபாவரை பெறுமதி மிக்க தங்கம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
மனிதக் கடத்தல் மற்றும் சமுத்திர குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய மிக சூட்சுமமாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலேயே, யாழ். நோக்கி தங்கத்தை எடுத்து சென்றுகொண்டு சென்றிருந்த நபரை ஆமர் வீதியில் வைத்தும்,
அதனை பெற்றுக்கொள்ள யாழில் காத்திருந்த நபரையும் பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நீண்ட விசாரணைகளை மனிதக் கடத்தல் மற்றும் சமுத்திர குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்துள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருய்வர் கூறினார்.
குறித்த விசாரணைகளின் பிரகாரம், இந்த கடத்தலின் பின்னணியில் டுபாயில் வசிக்கும் இந்தியர் ஒருவர் இருப்பது தெரியவந்துள்ளதுடன், அவர் ஊடாக சூட்சுமமாக விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு தங்கம் கடத்தப்பட்டு,
யாழ். ஊடாக கடல் மார்க்கமாக அந்த தங்கம் இந்தியாவுக்குள் கடத்தி செல்லப்படுவது தெரியவந்துள்ள தாக அறிய முடிகிறது. நேரடியாக இந்தியாவுக்குள் டுபாயிலிருந்து தங்கத்தை எடுத்து செல்லும்போது அறவிடப்படும் அதி கூடிய வரியிலிருந்து தப்பிப்பதர்காக இந்த சட்ட விரோத நடவடிக்கை இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த சம்பவத்தின் பின்னணி, எத்தனை ஆண்டுகளாக இந்த வர்த்தகம் இடம்பெறுகிறது உள்ளிட்ட விடயங்களை வெளிப்படுத்திக்கொல்வதற்காக சிறப்பு விசாரணைகளை மனிதக் கடத்தல் மற்றும் சமுத்திர குற்ற விசாரணைப் பிரிவின் சிறப்புக் குழுவினர் ஆரம்பித்துள்ளனர்