ராஜபக்ஸவின் யாழ்.வருகையின்போது எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் விசாரணை..!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ யாழ்.மட்டுவில் பகுதிக்கு விஜயம் செய்திருந்தபோது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் இணைந்து எதிர்ப்பு போராட்டம் நடத்தியமைக்காக வலி, கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையின் உப தவிசாளர் செல்வரட்ணம் மயூரன் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தமக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் நாளை  வியாழக்கிழமை காலை 9 மணிக்கு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைகளுக்காக சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் யாழ்.விஜயத்தின்போது காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக மட்டுவில் பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

அவ்வாறாக வருகை தந்த தாய்மாரை பொலிசாரும் இராணுவத்தினரும்  கடுமையாக தாக்குவதை அறிந்து அப் பகுதிக்குச் சென்ற வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் உள்ளிட்டவர்கள்,

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினருடன் இணைந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிகோரியும் தாய்மார் தாக்கப்பட்டதை கண்டித்தும் பொருளாதார மத்திய நிலைய வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் அங்கு பதாகைகள் எரிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பொலிசாரினால் வலி. கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் உள்ளிட்டவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews