ஞானசார தேரர் தலைமையிலான “ஒரே நாடு ஒரே சட்டம்” ஆணைக்குழு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ஆளும் கட்சியின் நீதியமைச்சரும், வெளியுறவு அமைச்சரும் எவ்வித பதில்களையும் வழங்கமுடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டனர்.
குறிப்பாக, பயங்கரவாத தடைச்சட்ட திருத்தத்தை முன்வைத்த அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், விவாதங்களின் பின்னர், பதிலுரையை வழங்கியபோது, இந்த சூழ்நிலைக்கு முகங்கொடுத்தார்.
அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உரையாற்றிக்கொண்டிருக்கையில் குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கையில் எந்த சட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்று குறிப்பிட்டார்.
நாட்டில் இன்று செயற்பட்டு கொண்டிருக்கும் ஒரே நாடு ஒரே சட்டம் ஆணைக்குழு தமக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்று முழுமையாக சிங்கள மொழியில் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது அந்த கடிதத்தையும் அவர் சபையில் காண்பித்தார்.
எனினும் அமைச்சர் பீரிஸோ அல்லது அமைச்சர் அலி சாப்ரியோ எவ்வித பதில்களையும் வெளியிடவில்லை.
குறி;ப்பாக இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதாக கூட அவர்கள் கூறவில்லை.
மாறாக நேற்றைய தினமே நிறைவேற்றப்படவேண்டும் என்ற அடிப்படையில், கொண்டு வரப்பட்ட தமது யோசனை தொடர்பில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தமது உரையை தொடர்ந்தார்.