பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து நாளை யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அக் கட்சியின் ஊடகபேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்தார்.
அவர் இன்று (25) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இலங்கையில் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. பொருளாதாரம் பாதாளத்திற்குள் சென்றுள்ளது. ஒரு பவுண் தங்கத்தின் விலை ஒன்றரை இலட்சம். காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களுக்கு வெறும் ஒரு இலட்சம். இது தான் அரசாங்கத்தின் நீதி.
மக்கள் ஒருவேளை கஞ்சிக்கு கூட கையேந்தும் நிலைமையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். இனப்படுகொலையால் வஞ்சிக்கப்பட்ட தமிழ் தேசம் குறிப்பாக வடக்கு – கிழக்கு பகுதி மக்கள் இந்த பொருளாதார நெருக்கடியால் மேலும் சிக்கி திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
வட- கிழக்கில் இருந்து தமிழ் மக்கள் அகதிகளாக தமிழகத்திற்கு செல்லத் தொடங்கியுள்ளார்கள். இனியும் அமைதி காத்தால் இந்த அரசாங்கம் நிலபுலங்களை விற்பது போல் மக்களையும் விற்கத் தொடங்கிவிடும்.
இந்த அரசாங்கத்தின் பொருளாதார சீர்கேடுகளுக்கு எதிராகவும், விலை உயர்வுக்கு எதிராகவும், பொருளாதாரத்தை சீரழித்ததிற்கு எதிராகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி நாளை (26) காலை 10 மணிக்கு யாழ். பேரூந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளளோம்.