
இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள ரஷ்யாவை சேர்ந்த இளம் தம்பதியிடம் சுமார் 13 லட்சம் பெறுமதியான பொருட்கள், பணம் மற்றும் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் களுத்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
எனினும் கொள்ளை நடைபெற்று இரு மணி நேரத்துக்குள் சந்தேக நபர்களைக் கைது செய்து, கொள்ளையிடப்பட்ட பணம், ஆவணங்கள் அடங்கிய பயணப் பையை பொலிஸார் அதிரடியாக மீட்டிருக்கின்றனர்.
இந்த ரஷ்ய நாட்டு தம்பதியினர், கலுத்துறை – பலாத்தோட்டை பகுதியில் நடந்து செல்லும் போது மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையன் அவர்களின் பயணப் பையை கொள்ளையிட்டு சென்றுள்ளான்.
இதனையடுத்தே அந்த தம்பதியினர் அது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர். அந்த பயணப் பையில் 1335 யூரோ, 1650 அமரிக்க டொலர், 3250 ரூபா பணம் இருந்ததாக முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
முறைப்பாட்டை அடுத்து, களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கயான் கிரிஷாந்தவின் தலைமையிலான சிறப்பு குழு விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கொள்ளை நடந்தப் இடத்திலும் அதனை அண்மித்தும் காணப்பட்ட சி.சிரி.வி. கானொளிகள் பொலிசாரால் சோதனையிடப்பட்ட நிலையில், குறித்த ரஷ்ய தம்பதியை கொள்ளையர்கள் தொடர்ச்சியாக பின் தொடர்ந்துள்ளமை தெரியவந்துள்ளது.
ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில், இலக்கத் தகட்டின் ஒரு பகுதி மறைத்தவாறு இக்கொள்ளை இடம்பெற்றிருப்பதும் சி.சி.ரி.வி. கணொளிகள் ஊடாக பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.
இவ்வாறான நிலையிலேயே மேலதிக விசாரணைகளில், களுத்துறை பொலிஸ் உளவுச் சேவையின் தகவல்களை மையப்படுத்தி மறைந்திருந்த சந்தேக நபரை களுத்துறை – கித்துலாவ பகுதியில் தங்குமிடமொன்றில் வைத்து கைது செய்தனர்.
இதன்போது சந்தேக நபரின் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் இருக்கையின் கீழால் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொள்ளையிடப்பட்ட ரஷ்ய தம்பதியின் பயணப் பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அதிலிருந்த பணம், 2 கடவுச் சீட்டுக்கள், இரு சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரங்கள், ரஷ்ய சாரதி அனுமதிப் பத்திரங்கள், அப்பிள் ரக கையடக்கத் தொலைபேசி, மாஸ்டர் தானியக்க பணப் பரிமாற்று அட்டைகள் 4, உள்ளிட்டவை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது சந்தேக நபரிடம் இருந்து ஹெரோயின் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்ப்ட்டவர் ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையானவர் எனக் கூறும் பொலிசார்
சந்தேக நபர் நேற்று ( 25) நீதிமன்றில் ஆஜர் செய்துள்ளனர்.