ரஷ்ய செல்வந்தரும், செல்சி அணியின் முன்னாள் உரிமையாளருமான ரோமன் அப்ரமோவிச் உள்ளிட்ட இரண்டு உக்ரைனிய சமாதான பேச்சுவார்த்தையாளர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் தலைநகர் கிவ்வில் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து விஷம் அருந்தியதற்கான அறிகுறிகளை அனுபவித்ததாகரோமன் அப்ரமோவிச்சிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும் இந்த சம்பவம் மிகவும் மர்மமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 3ம் திகதி உக்ரைன் தலைநகர் கிவ்வில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சந்திப்பில் கலந்துகொண்ட மூன்று பேர், நரம்பு சார்ந்த போயிசிங் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டதாகவும், தோல் அழற்சி, எரிச்சல் கொண்ட கண்கள் மற்றும் கண்களுக்குப் பின்னால் கடுமையான வலி அறிகுறிகள் இரவு முழுவதும் நீடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் யாரும் சொக்லேட் மற்றும் தண்ணீரைத் தவிர வேறு எதையும் சாப்பிடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரசாயன ஆயுத நிபுணர்கள் இந்த வழக்கை ஆய்வு செய்து, இது வேண்டுமென்றே செய்யப்பட்டதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
எனினும், இதனை யார் செய்தது என்று தெரியவில்லை. இதற்கு யாரும் உரிமையும் கோரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் ரஷ்யா தரப்பிடம் இருந்து எந்த கருத்துகளும் வெளியாகவில்லை. இந்த சம்பவத்திற்கு பின்னால் யார் இருந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. யாரோ ஒருவர், சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ரஷ்ய செல்வந்தரான ரோமன் அப்ரமோவிச் செல்சி காற்பந்துக் அணியின் தலைவராக தலைவராக செயற்பட்டார். எனினும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து அப்ரமோவிச்சுக்கு நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து செல்சி அணியை விற்கத் திட்டமிடுவதாக ரோமன் அப்ரமோவிச் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் அப்ரமோவிச்சுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.