இதனிடையே, மக்கள் திரள்வதைத் கட்டுப்படுத்தவும், ஜனாதிபதியின் இல்லத்துக்கு பாதுகாப்பு ஏற்படுத்தவும், போடப்பட்டிருந்த தடுப்புக்களை தகர்த்தும், மக்கள் முன்னேற முயன்றனர். இதனால், அவர்களுக்கும் பொலிஸ், இராணுவ தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதி போர்க்களம் போன்று காட்சியளித்தது.
நாட்டில் ஏற்பட்டுள்ள, நெருக்கடிகளுக்கு தீர்வு கோரியும், எரிபொருள்கள் மற்றும் பொருட்களின் விலைகளைக் குறைக்கவும் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குமாறும் வலியுறுத்தியுமே இந்தப் போராட்டத்தை ஆரம்பத்தில் சில இளைஞர்கள் முன்னெடுத்திருந்தனர். போராட்டத்துக்கு பெருகிய ஆதரவால் கொழும்பின் பல பகுதிகளுக்கும்; போராட்டம் பரவியது.
இந்நிலையில், ஜனாதிபதியின் இல்லம் இருக்கும் மிரிஹான பங்கிரவத்தை வீதியில் மக்கள் இரவு 8 மணியளவில் திரள ஆரம்பித்தனர். இவ்வாறு திரண்டவர்களால் 119 தட இலக்க வீதியூடான போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் பல்வேறு கோஷங்களை வலியுறுத்தியதுடன், தோற்றுப் போன அரசாங்கமே வீட்டுக்குப் போ, ஜனாதிபதியே வீட்டுக்கு போ, கோட்டாபயவே பதவி விலகு என்று கோஷங்களையும் எழுப்பினர். அத்துடன், அவர்கள் ‘கூ’வென்றும் ஒலியெழுப்பினர்.
இவ்வாறு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்ந்த போராட்டத்தைத் தொடர்ந்து கண்ணீர் குண்டுகள் பிரயோகிக்கப்பட்டு, நீர்த்தாரை பிரயோகம் செய்யப்பட்டு போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமுற்ற மக்கள் இராணுவம், பொலிஸாருக்கு சொந்தமான பஸ்களை கற்களால் தாக்கி சேதப்படுத்தினர்.