உக்ரேனிய தேசிய பாதுகாப்பு சேவையின் மூத்த உறுப்பினர்கள் இருவரை “துரோகிகள்” என்ற அடிப்படையில் பதவி நீக்கம் செய்ததாக அந்த நாட்டின் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.
“எல்லா துரோகிகளையும் சமாளிக்க எனக்கு நேரம் இல்லை” ஆனால் அவர்கள் அனைவரும் படிப்படியாக தண்டிக்கப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இரண்டு உயர் அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்ட அவர், உக்ரைனிய மக்களுக்கு விசுவாசமான இராணுவ உறுதிமொழியை மீறுபவர்கள் உயர் இராணுவ பதவிகளை இழக்க நேரிடும் என்று எச்சரித்தார்.
இதேவேளை உக்ரைனில் இராணுவ நடவடிக்கை முற்றிலும் திட்டத்தின் படி இடம்பெறுகிறது.
எனினும் இந்தத் திட்டம் நாடாளுமன்றத்துடன் பகிரப்படவில்லை என்று ஜனாதிபதி புட்டினின் யுனைடெட் ரஸ்ய கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மொஸ்கோ விரும்பினால், இந்த நடவடிக்கையை விரைவாக செயற்படுத்த முடியும். ஆனால் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க ரஸ்ய படைகள் கவனம் செலுத்துகின்றன என்று ரஸ்யாவின் ஸ்டேட் டுமாவின் உறுப்பினரான மரியா புட்டினா தெரிவித்துள்ளார்.
இதேவேளை உக்ரைன் மீது ரஸ்யா தாக்குதல்களை ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 1,179 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 1,860 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எனினும் மரியுபோல் நகரில் மாத்திரம் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.