தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் பிச்சைக்காரர்கள் என கூறியிருக்கும் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா, அவர்களிடம் ஒன்றுமில்லை எனவும் கூறியுள்ளார்.
தந்தை செல்வாவின் 124ஆவது ஜனன தின நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் பிச்சைக்காரர்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் காணப்படுகின்றார்கள்.
ஆனால் எமது அரசியல்வாதிகளிடம் அவர்களுக்கு உதவுவதற்கு எந்த ஒரு திட்டமும் இல்லை. நிகழ்ச்சி நிரலும் இல்லை.
அடுத்த மாகாண சபைத் தேர்தலுக்கு எவ்வாறு செயற்படுவது தொடர்பில் செயற்படுகிறார்களே தவிர தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக செயற்படவில்லை.
எங்களிடம் ஒரு நிகழ்ச்சி நிரல் இல்லை, ஒரு திட்டமிடல் இல்லை, ஏதாவது ஒரு சம்பவம் என்றால் முதல் நாள் கூட்டத்தைக் கூட்டி ஓர் அறிக்கையைத் தயாரித்து
அதை வாசித்துவிட்டு செல்வது தான் தற்போதுள்ள நிலைமை. அது மாற்றியமைக்கப்பட வேண்டும். குறிப்பாக வடக்கு, கிழக்கை மனதளவில் ஒற்றுமையாக்க வேண்டும்.
அத்தோடு வட,கிழக்கை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம், எவ்வாறு முன்னேற்றலாம். அதற்கென்று ஒரு நிகழ்ச்சி நிரல் ஒரு திட்டமிடல் எங்களிடம் இல்லை.
நாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்களாக இருக்கலாம். ஆனால் தொடர்ந்தும் அவ்வாறே இருக்கத் தேவையில்லை. எமக்கென்று ஒரு பாரம்பரியம் உள்ளது.
ஏனைய உலக நாடுகளில் அந்த நாடுகளின் தயாரிப்புகளில் அந்த நாடுகளின் பெயர்கள் குறிப்பிடப்படும். ஆனால் யாழ்ப்பாண தயாரிப்பு என்று ஏதாவது உள்ளதா?
அரசியல்வாதிகள் யாராவது எதையாவது சுட்டிக்காட்டுகிறார்களா? இல்லை. உதாரணமாக தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறு திருமுருகன் எவ்வளவு சமூகப் பணி செய்கின்றார்.
ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவ்வளவு விடயத்தினை செய்ய முடிந்ததா? இல்லை. அவர் எந்த ஓர் அரசியல் தலையீடும் இன்றி தன்னிச்சையாக பல சமூக செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிலையில்,
எந்த ஒரு செயற்பாடும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் இன்று வரை செயற்படுத்தப்படவில்லை.
இந்த மார்ச் மாதமானது, மகளிர் தினத்துக்குரிய மாதம் அந்த மகளிர் தின மாதத்தில் அரசியல் கட்சிகள், அரசியல் வாதிகள் ஏதாவது தேவைப் படும் மக்களுக்கு உதவி செய்யலாம்.
அத்தோடு இந்த அரசியல்வாதிகள் முதலில் தமக்குரிய அரச வீடு, சொகுசு வாகனம், சொகுசு வாழ்க்கை அனைத்தையும் தவிர்த்து மக்களோடு மக்களாக இருந்து வாழ்வதன் மூலமே மக்களுடைய பிரச்சினைகள் தெரியும்.
தற்பொழுது தந்தை செல்வா அறக் கட்டளை நிதியம் சில செயற்பாடுகளை முன்னெடுக் கின்றது. அது மிகவும் வரவேற்கத் தக்க விடயம். அவர்கள் அதனை தொடர்ச்சியாக செயற்படுத்த வேண்டும்.
தந்தை செல்வாவின் நோக்குத்தான் தமிழ் மக்களை உலகத்துக்கு காட்டியது. எமக்கு ஒரு கலை கலாசாரம் உள்ளது. எமக்கு ஒரு மொழி உள்ளது என்பதை உலக நாடுகளுக்கு காண்பித்தது தந்தை செல்வாவின் செயற்பாடுகளே.
தற்பொழுது தமிழ் அரசியல்வாதிகளையும் கொழும்பில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். அதாவது வடக்கில் ஆட்கள் இல்லை என்று கொழும்பில் இருந்து அரசியலுக்கு ஆட்களை இறக்குகிறார்கள்.
இதெல்லாம் திருத்தப்பட வேண்டிய விடயம். இந்திய நாட்டைப் பார்த்தால் எத்தனையோ மொழிகள், எத்தனையோ இன மக்கள் உள்ளார்கள்.
ஆனால் அவர்கள் இன்று உலக நாடுகளில் தலைசிறந்து விளங்குகின்றார்கள். அதற்கு காரணம் சிறந்த அரசியல் யாப்பை உருவாக்கியதே காரணம்.
ஆனால், நமது அரசியல்வாதிகள் அரசியல் யாப்பை உருவாக்குவது தொடர்பில் சிந்திக்கவில்லை. இன்றும் 13 ,13+, சமஷ்டி என்று தமக்குள்ளே கருத்து முரண்பாடே தவிர செயற்படுத்த முடியவில்லை.
தமிழ் மக்களின் தந்தை என போற்றப்படும் தந்தை செல்வநாயகம் தமிழ் மக்களால் மட்டுமல்ல இலங்கையில் உள்ள அனைவராலும் அனைத்து இன மக்களாலும் போற்றப்பட்டவர்.
அவரது வாழ்க்கை முறை மிகவும் வித்தியாச மானது. அவர் மிகவும் மென்மையானவர். அரசியலுக்கு வந்த பின்னரும் அவர் சிறந்து மென்மையான
போக்குடன் செயற்பட்டதன் காரணமாக அவரை அனைவரும் மதித்து செயற்பட்டார்கள் என்றார்.