ஆட்டம் கண்டுள்ள இலங்கை அரசின் போராட்டங்களை தடுக்கம் முடிவால் நாளைய போராட்டத்தை தற்காலிகமாக பிற்போட்டுள்ளோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் குடும்பங்களின் சங்க தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் ஏற்கனவே ஊடகங்கள் ஊடாக எங்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தோம். நாளை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த பேரணிக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாளை நடக்கவிருந்த கண்டன பேரணியை நாங்கள் பிற்புாட்டுள்ளோம்.
இலங்கை அரசு ஆட்டம் கண்டுள்ள இந்த வேளையில் மக்களுடைய ஆர்ப்பாட்டங்களையும், எதிர்ப்புக்களையும் சமாளிக்க முடியாத இலங்கை அரசு அவசரகால தடையுத்தரவை பிறப்பித்திருக்கின்றது. மக்கள் கூட்டமாக இருந்தால் எல்லா அதிகாரங்களையும் பயன்படுத்தி மக்களை அப்புறப்படுத்தவும், அதனை மீறி போராட்டங்களில் ஈடுபட்டால் சுடுவதற்கும் அதிகாரம் இருக்கின்றது என்பதை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள் .
பாதிக்கப்பட்ட எமது தாய்மாரை ஒன்று திரட்டி பெருமளவிலான பேரணி ஒன்றினை செய்ய ஏற்பாடு செய்திருந்தோம். குறித்த போராட்டத்தினை நாளை செய்யாது, குறுகிய கால இடைவெளிக்குள் மேற்கொள்வதற்கு உள்ளோம்.
நாளையை போராட்டம் பிற்போடப்பட்டுள்ளது என்பதனை எமது போராட்டத்திற்கு ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்புக்களையும் செய்ய முன்வந்துள்ள எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த தாயக உறவுகளிற்கு இந்த ஊடகங்கள் வழியாக தெரிவித்துக்கொள்கின்றோம் என அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.