இலங்கையின் ஜனாதிபதியும் தற்போதைய நிர்வாகமும் மக்களின் விருப்பத்திற்கு தலைவணங்கவேண்டும் என்று இலங்கை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேசனல் அழைப்பு விடுத்துள்ளது.
அவசரகாலச் சட்டங்கள், ஊரடங்குச் சட்டம் மற்றும் சமூக ஊடகத் தடைகள் ஆகியவற்றின் மூலம் குடிமக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் சட்டப்பூர்வமான ஒன்றுகூடல் ஆகியவற்றை முடக்குவதற்கு ஜனாதிபதி மற்றும் நிர்வாகத்தின் முயற்சிகளைக் கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்களின் செயல்களுக்கு பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையானது நாட்டில் ஊழலுக்கு எதிரான ஒரு முக்கியமான எதிரொலியாகும். மக்கள் இப்போது சத்தமாகவும் தெளிவாகவும் தங்கள் செய்தியை வழங்கியுள்ளனர்.
இந்த நாட்டு மக்களின் செயலற்ற குரல்கள் ஒன்றிணைந்து ஒரு சக்திவாய்ந்த அதிர்ச்சி அலையை உருவாக்கியுள்ளன.
இது அதிகாரத்தில் உள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையானது பல தசாப்தங்களாக பொது வளங்களை பாரிய அளவில் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் தவறாக நிர்வகித்தல், முறையான ஊழல்,வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாமை ஆகியவற்றின் வெளிப்பாடாகும்.
இந்தநிiலையில் உயர் மட்டங்களில் அரசியல் சூழ்ச்சிக்கான வாய்ப்பையும், மறைமுக நோக்கங்களைக் கொண்டவர்கள் அதிகாரத்திற்கு வருவதற்கான வாய்ப்பையும் இந்த சந்தர்ப்பம் வழங்கி விடும்.
எனவே இலங்கையர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இலங்கை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேசனல் சுட்டிக்காட்டியுள்ளது.
கலவர காலங்களில், அதிகாரத்திற்கு வருபவர்கள் மேலும் ஊழல் செல்வாக்கு செலுத்தி, அன்புக்குரிய தாய்நாட்டை நாசமாக்க முடியும்.
1948 இல் சுதந்திரம் பெற்றதில் இருந்து, ஊழல் காரணமாக இலங்கை பொருளாதாரச் சீர்குலைவுக்கு உள்ளாகியுள்ளது என்ற உண்மையை அங்கீகரிப்பது அவசியம்.
ஒரு நாட்டின் கொள்கைகள், சட்டங்கள் மற்றும் அமைப்புகள் ஆட்சியில் இருப்பவர்களின் நலனுக்காக மாற்றப்பட்டால், அது நாட்டுக்காக அல்ல. அது கைப்பற்றப்பட்ட நாடாகவே அடையாளப்படுத்தப்படுகிறது.
எனவே ஜனாதிபதியும் தற்போதைய நிர்வாகமும் மக்களின் விருப்பத்திற்கு தலைவணங்குமாறு அழைப்பு விடுப்பதாக இலங்கை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேசனல் கோரியுள்ளது.