அரசாங்கம் இன்று (05) நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்கும் அதே வேளையில் 113 ஆசனங்களின் தனிப்பெரும்பான்மையையும் இழக்க நேரிடலாம் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவான அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து அரசாங்கத்திலிருந்து விலக தீர்மானித்திருப்பதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 50 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்டு அரசாங்கத்தின் 113 பெரும்பான்மையை இழக்க நேரிடும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் நேற்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.