நிறைவேற்று அதிகார முறையை ஒழிக்க முழு ஆதரவு! – அரசுக்கு அதிர்ச்சி கொடுக்கும் மைத்திரி தரப்பு.

அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தில் திருத்தம் செய்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான எந்தவொரு பிரேரணைக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு முழுமையாக ஆதரவளிக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்கும் பிரேரணை கொண்டு வரப்பட்டால் ஒரு கையை அல்ல இரண்டு கைகளையும் உயர்த்தி அதற்கு அங்கீகாரம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்கள் ஜனாதிபதியை பதவி விலகச் சொன்னதால் மட்டும் அதனைச் செய்ய முடியாது என்றும் அவர் கூறினார். சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே இதைச் செய்ய முடியும் என்று அவர் வலியுறுத்தினார்

அரசாங்கப் பங்காளித்துவத்தில் இருந்து விலகி சுதந்திரமாகச் செயற்படுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானம் ஒரே இரவில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும், பல மாதங்களாக பல்வேறு தரப்பினருடன் நடத்திய நீண்ட கலந்துரையாடலின் விளைவு என்றும் அவர் கூறினார்.

கலாநிதி நந்தலால் வீரசிங்கவை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிப்பதற்கான தீர்மானம் குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் மேலும் பல துறைகளிலும் இவ்வாறான மாற்றங்கள் ஏற்பட வேண்டும் எனவும் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

புத்திஜீவிகள் மற்றும் தொழில் வல்லுனர்களின் பங்களிப்புடன் நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் வகுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழு பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கான காரணங்களை விளக்குவதற்காக இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews