கேகாலை மாவட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய பௌத்த பிக்கு மீது நடத்தப்பட்ட குண்டர் தாக்குதலுக்கு காரணமானவர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உள்ளூர் அரசியல்வாதி ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவிசாவளை பனாவல வீதியில் வெலங்கல்ல சந்தியில் இன்று பிரதேச மக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, மாணியங்கம ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி அம்பன்வெல ஹேமலங்கர தேரர், தாக்குதலை நடத்திய தெஹியோவிட்ட பிரதேச சபையின் தலைவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.
“தாக்குதலை நடத்திய குண்டர் தெஹியோவிட்ட பிரதேச சபைத் தலைவர் துமிந்து ஷியாமனைக் கைது செய்து சட்டத்தை முறையாக அமுல்படுத்த வேண்டும்.”
படங்கல தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்கள் ஏப்ரல் 5 ஆம் திகதி செவ்வாய்கிழமை அமைதியான போராட்டத்தை நடத்திய பின்னர், பல்கலைக்கழகத்திற்குத் திரும்பும் வழியில் அவர்களின் பாதுகாப்புக்காக முச்சக்கர வண்டியில் பயணித்த அத்துல்கம ராகுல தேரர் மீது குண்டர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வீதியை மறித்த குண்டர்கள் குழு ஒன்று பிக்குவை தாக்கி பேருந்தில் ஏறுமாறு அச்சுறுத்தியதையடுத்து மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். தலை மற்றும் தோள்களில் தாக்கப்பட்டதில் காயமடைந்த தேரர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
“இப்போது நாங்கள் வைத்தியசாலைக்குச் சென்று வந்தோம். உள்ளே நான்கு அங்குல காயம் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.” என ஊடகங்களுக்குத் தெரிவித்த அம்பன்வெல ஹேமலங்கார தேரர் சீதாவக்க ராஜசிங்க மன்னருக்குப் பின்னர் சப்ரகமுவ மாகாணத்தில் இடம்பெற்ற முதலாவது தாக்குதல் சம்பவம் இதுவெனவும் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
பிக்குகள் மற்றும் அப்பாவி மாணவர்கள் மீது அரசியல்வாதிகள் இவ்வாறான தாக்குதல்களை நடத்தினால், நாட்டின் ஏனைய பகுதிகளின் பாதுகாப்பு என்னவாகும் என கேள்வி எழுப்பிய ரஜமஹா விகாரையின் விஹாராதிபதி, குண்டர்களை நாட்டில் உயர் பதவிகளுக்கு நியமிப்பதை தவிர்க்குமாறு வாக்காளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தெஹியோவிட்ட பிரதேச சபையின் தலைவர் தாக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.