ஜீன் மாதத்தின் பின்னர் நாடு இருளில் மூழ்கும்..! இலங்கை வர்த்தக சம்மேளனம் எச்சரிக்கை.. |

நாட்டில் உருவாகியிருக்கும் மோசமான நிலைமையினை மக்கள் அறியாமல் உள்ளதாக கூறியிருக்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் உப தலைவர் துமிந்த ஹீலங்கமுவ, யூன் மாதத்தின் பின்னர் நாடு இருளில் மூழ்கும் எனவும் எச்சரித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், நம் நாட்டு மக்களுக்கு நிலைமையின் தீவிரம் தெரியுமா என்று தெரியவில்லை. 

இந்த வாரம் IMF பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை என்றால், நிதி ஆலோசகரை நியமித்து, கடனை மறுசீரமைக்க முடியாது. ஜூலையில் நாங்கள் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டும்,

எமது கையிருப்பில் இருந்து இதனை செலுத்த வேண்டும். இந்த ஒரு பில்லியனை செலுத்துவதற்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு எவ்வித இறக்குமதிகளை மேற்கொள்ளாமல் நமது வருவாய் அனைத்தையும் சேமிக்க வேண்டும்.

அப்போது இந்த நாட்டில் மருந்து, மின்சாரம், எரிபொருள், எரிவாயு எதுவும் இருக்காது. மே மாத இறுதிக்குள் இந்தியாவில் இருந்து வரும் எரிபொருள் தீர்ந்துவிடும். அதற்குப் பிறகு எரிபொருளை பெற்றுக் கொள்வது எப்படி?

நிலைமை மிகவும் தீவிரமானது. IMF உடன் பேச்சுவார்த்தை நடத்த நிதி அமைச்சர் ஒருவர் இருக்க வேண்டும். ஒரு அரசாங்கம் இருக்க வேண்டும். நாம் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால்,

ஜூன் மாதத்திற்கு பிறகு நாடு முழுவதும் இருளில் மூழ்கும். இன்று நாம் ஒரு பில்லியன் இல்லை 100 மில்லியன் கூட கொடுக்க முடியாத நிலையில் உள்ளோம். என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews